யாருக்கெல்லாம் இலவசம்? 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட முழு விவரம் இதோ...!
Seithipunal Tamil May 11, 2026 01:48 AM

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் நலனைக் கவனத்தில் கொண்டு இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் முக்கிய திட்டத்திற்கு தனது முதல் கையெழுத்தை பதிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுந்து வந்தன.

இந்த நிலையில், திட்டத்தின் நடைமுறை விதிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு மாதங்களுக்கு மொத்தமாக 500 யூனிட் வரையிலான மின்சார பயன்பாடு கொண்ட வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மட்டுமே புதிய 200 யூனிட் இலவச மின்சார சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 500 யூனிட்டுகளை கடந்த அளவில் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இந்த புதிய சலுகை பொருந்தாது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் முதல் 100 யூனிட் இலவச மின்சார திட்டமே தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த புதிய 200 யூனிட் இலவச மின்சார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.