School Reopening: பள்ளிகள் திறப்பு; முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கிய கோரிக்கை!
க.சே.ரமணி பிரபா தேவி May 26, 2026 07:44 PM

மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

2026- 27ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்

இந்த நிலையில் வீசும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

’’தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில், மாணவர்களின் உடல்நலன் குறித்த அச்சம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக வெப்பத்தில் பள்ளிக்குச் செல்வதால் நீரிழப்பு, சோர்வு, வெப்பக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் கற்றல் திறனும் கவனமும் குறையக்கூடும். 

ஒரு வார காலத்திற்கு தள்ளிப் போட கோரிக்கை

எனவே மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பள்ளிகள் திறக்கும் தேதியை குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு தள்ளிப் போட வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தள்ளிவைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு

திமுக தலைவர் ஸ்டாலினின் தலைமையிலான #DravidianModel ஆட்சியின்போது, கோடை வெயிலைக் கருத்தில்கொண்டும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த முறையை தற்போதைய அரசும் தொடர வேண்டும். வெயிலின் தாக்கம் குறையும் வரையில், வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். மாணவர்களின் நலன் மிக முக்கியம்!’’ என்று முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.