பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று மேலமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பெரம்பலூரில் இருந்து திமுகவினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிக மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் திரண்டிருந்த அக்கட்சியினர், திமுகவினரின் காரை வழிமறித்து திடீர் தகராறில் ஈடுபட்டனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அண்மையில் விசிக-வை விமர்சித்துப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இரு தரப்பினரும் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக கல் மற்றும் கட்டைகளால் மாறி மாறித் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்ததோடு, மாவட்ட எஸ்பி லலித்குமார் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினார். இந்தத் தாக்குதலில் திமுக தரப்பில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்; கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல, மூடத்தனம்” எனக் குறிப்பிட்ட அவர், ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் முழக்கத்தை அனைவரும் இதயத்தில் ஏந்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.