இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் இந்தப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானின் புதிய பொருளாதார நகர்வுகளுக்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்து வந்த ஈரான், தற்போது தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஹார்மூஸ் ஜலசந்தி வழியே செல்லும் சர்வதேசச் சரக்குக் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் மற்றும் புதிய வரிகளை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர மசோதா ஒன்றைக் கொண்டு வரத் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறது. இந்த விதியின்படி, அந்தப் கடல் பகுதி வழியே எரிசக்தி மற்றும் உணவு வினியோகத்திற்கான சரக்குகளைக் கொண்டு செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களும் ஈரானுக்குக் கட்டாயமாகச் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஈரானின் இந்தத் திடீர் வரி விதிப்பு முடிவுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ, ஹார்மூஸ் ஜலசந்தியை எவ்விதக் கட்டணமும் இன்றி சர்வதேசப் போக்குவரத்திற்குத் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உலகளவில் ஈரானைத் தவிர வேறு எந்த நாடும் இந்தச் சுங்க நடைமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஈரானின் இந்தத் தன்னிச்சையான பொருளாதாரக் கட்டுப்பாடு சட்டத்திற்குப் புறம்பானது, சட்டவிரோதமானது மற்றும் உலக நாடுகளால் எப்போதிலுமே ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.