இன்றைய வேகமான உலகளாவிய வாழ்வியல் சூழலில், பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாட உணவில் தேவையான அளவு நார்ச்சத்தை (Fibre) சேர்த்துக் கொள்வதில்லை என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாக உள்ளது. சமீபத்திய ஊட்டச்சத்து ஆய்வுகளின்படி, பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவான 30 கிராம் நார்ச்சத்தை மிகக் குறைந்த சதவீதத்தினரே எட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உடல் வலிமை மற்றும் தசை வளர்ச்சி என்ற பெயரில் புரதச்சத்திற்கு (Protein) கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத நார்ச்சத்திற்கு வழங்கப்படவில்லை. மலச்சிக்கல், வயிற்று உப்பசம், திடீர் ஆற்றல் குறைவு மற்றும் அடிக்கடி பசி எடுத்தல் போன்ற கோளாறுகள் உடலில் போதுமான நார்ச்சத்து இல்லை என்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
உடல் ஆரோக்கியத்தில் நார்ச்சத்தின் முக்கிய பங்குபிரபல ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, நார்ச்சத்து என்பது வெறும் செரிமானத்திற்கு மட்டும் உதவுவது அல்ல, மாறாக அது குடல் ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்க பெரிதும் உதவுகிறது. உணவில் அதிகளவில் நார்ச்சத்தை சேர்த்துக் கொள்வது, உடலில் ஏற்படும் அலர்ஜியைக் குறைப்பதோடு மட்டுமின்றி, நீண்ட கால நோய்களின் அபாயத்தையும் தடுக்கிறது. குறிப்பாக, இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes), பக்கவாதம், இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்க இது ஒரு சிறந்த அரணாக விளங்குகிறது. மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலைநிறுத்தி, தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்துவதால் உடல் எடையை சீராக பராமரிக்க நினைப்போருக்கு இது மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகும்.
டார்க் சாக்லேட் முதல் வெண்ணெய் பழம் வரைநார்ச்சத்து என்றாலே சுவையற்ற உணவுகள் என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில், நாம் அன்றாடம் ரசித்து சாப்பிடும் சில உணவுகளில் இது நிறைந்துள்ளது. 70% மேல் கோகோ உள்ள டார்க் சாக்லேட் மற்றும் ஒரு தேக்கரண்டி காய்ந்த தேங்காய் துருவலில் (2 கிராம்) நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. அதேபோல் வாசனைப் பொருளான இலவங்கப்பட்டை தூள் (ஒரு தேக்கரண்டியில் 2 கிராம்) மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த வெண்ணெய் பழத்தில் (பாதி பழத்தில் 5 கிராம்) நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
பேஷன் புரூட், பாப்கார்ன் மற்றும் காபி100 கிராம் பேஷன் புரூட் பழத்தில் 8 கிராமும், ஆரோக்கியமான முழு தானிய நொறுக்குத் தீனியான 25 கிராம் பாப்கார்னில் 3 முதல் 4 கிராம் நார்ச்சத்தும் உள்ளது. வியக்கத்தக்க வகையில், நாம் குடிக்கும் ஒரு கோப்பை காபியிலும் கரையக்கூடிய நார்ச்சத்து அடங்கியுள்ளது. மேலும், 125 கிராம் ராஸ்பெர்ரி பழத்தில் 8 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பார்லி, பச்சை பட்டாணி மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்குமுத்து பார்லியில் உள்ள பீட்டா-குளுகன் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற 160 கிராம் பச்சை பட்டாணியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது. இறுதியாக, ஒரு நடுத்தர அளவிலான சர்க்கரைவள்ளி கிழங்கில் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது; இதனைத் தோலுடன் சாப்பிடுவது கூடுதல் நன்மையைத் தரும்.