புதுச்சேரி: புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ரங்கசாமி பதவியேற்று பல நாட்களாகியும், இன்னும் முழுமையான அமைச்சரவையை அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த இழுபறிக்குக் காரணம் நிர்வாகச் சிக்கல் அல்ல; பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும் "சிறுபான்மையின அரசியல் புறக்கணிப்பு" என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி புதுச்சேரி அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது!
புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியேற்ற நிலையிலும், அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு சிறுபான்மையின அரசியல் சாதியக் கணக்குகளே காரணம் என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது. லட்சிய ஜனநாயக கட்சியின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுவதற்குப் பின்னால் உள்ள அரசியல் காரணங்கள் குறித்துப் பல்வேறு பரபரப்புத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் கூட்டணி வாரியாக வென்ற இடங்களின் விவரம்:
என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 04, அதிமுக 01, லட்சிய ஜனநாயக கட்சி (லஜக) 01, மொத்த என்.டி.ஏ கூட்டணி 18; திமுக 05, காங்கிரஸ் 01, நேயம் மக்கள் கழகம் 01, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 02, சுயேச்சைகள் 03
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக பேரவைத் தலைவராக அன்பழகன் நியமிக்கப்பட்டு, ரங்கசாமி உட்பட 28 எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்று முடித்த நிலையிலும், முழுமையான அமைச்சரவை இதுவரை அமைக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
இத்தேர்தலில் அதிமுக-வைக் காட்டிலும் புதுச்சேரியில் அதிக வாக்குகளைப் பெற்று, சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் லட்சிய ஜனநாயக கட்சியின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். கூட்டணி தர்மத்தின்படி இவருக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்குப் பதவி வழங்க என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கூட்டணியில் உள்ள சில முக்கியப் புள்ளிகள் முட்டுக்கட்டை போடுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இது லட்சிய ஜனநாயக கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மீது ஏற்கனவே 'மதச்சார்புள்ள கட்சி' என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள சூழலில், சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதியிருந்தும் அமைச்சர் பதவி மறுக்கப்படுவது, பாண்டிச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு பெரும் அரசியல் பின்னடைவை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு நடக்கும் இந்த இழுபறி, கடந்த ஆட்சியின் இறுதியில் நடந்த ஒரு கசப்பான துரோகத்தை மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது. கடந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தூக்கியடிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி முடியும் வரை அவருக்கு ஒரு துறையைக்கூட (இலாகா) ஒதுக்காமல், வெறும் ‘டம்மி’ அமைச்சராகவே வைத்திருந்த அவலம் அரங்கேறியது. அதே போன்றதொரு சதித்திட்டமும், ஓரங்கட்டும் அரசியலும்தான் தற்போதும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு எதிராகத் திரைமறைவில் அரங்கேறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
லட்சிய ஜனநாயக கட்சியினர் தங்களது ஆதங்கத்தையும், தார்மீக எதிர்ப்பையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசை வழிநடத்தும் முதலமைச்சர் ரங்கசாமி, கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு அமைச்சரவையில் தகுந்த இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மறுபுறம், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி தராமல் தவிர்ப்பதற்குப் பின்னால் பாஜக மற்றும் அதிமுக-வின் மறைமுக அழுத்தங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் தவெக கட்சியால் நடந்த மாற்றைதை போல் புதுச்சேரியிலும் லட்சிய ஜனநாயக கட்சி மூலம் மாற்றம் நிகழும் என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.
தொடர்ந்து எழுந்து வரும் கடுமையான விமர்சனங்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் எதிர்ப்புகளுக்குப் பணிந்து, முதலமைச்சர் ரங்கசாமி தனது அமைச்சரவையில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு உரிய இடத்தைக் கொடுப்பாரா அல்லது சிறுபான்மையின அரசியல் புறக்கணிப்பு என்ற விமர்சனத்திற்கு ஆளாவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். புதுச்சேரி அரசியல் களம் தற்போது இந்த ஒற்றை கேள்வியை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது