தமிழக அரசியலில் தவெக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நகர்வுகள் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) இதுகுறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாக அதிமுக தரப்பில் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்திருந்தனர். அவர்களுள் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களின் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, முறைப்படி தவெக-வில் இணைந்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ-க்களின் இந்த திடீர் அரசியல் மாற்றம், தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இதனை தவெக-வின் அப்பட்டமான "குதிரை பேரம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கூட்டாகக் கண்டித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
பெ.சண்முகம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்குள் நிலவி வரும் அடுக்கடுக்கான குழப்பங்களும், கோஷ்டி மோதல்களுமே இந்த ராஜினாமா நிலைக்குக் காரணம்.ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் சேர்ந்திருப்பது அவர்களின் சொந்த விருப்பம் என்று கூறினாலும், இது எவ்வித பிரதிபலனும் இல்லாமல் இயல்பாக நடந்த செயலாகக் கருத முடியாது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல! சிபிஐ(எம்) விமர்சனம்!! pic.twitter.com/aepVafsEO3
— Shanmugam P (@Shanmugamcpim) May 26, 2026
ஏற்கனவே சட்டமன்றத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், இந்த எம்.எல்.ஏ-க்கள் சட்ட ரீதியான (கட்சித் தாவல் தடைச் சட்டம் போன்ற) நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில், அவர்கள் ராஜினாமா செய்த உடனே தவெக அவர்களைத் தங்களது கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், இத்தகைய அரசியல் சட்ட விரோதப் போக்குகளை தவெக-வே முன்னின்று ஊக்குவிக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்த நடவடிக்கை ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டிற்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டிக்காட்டுகிறது.