CM Vijay - Ajith: நடிகர் அஜித்தின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபோது உடன் நடிகை த்ரிஷாவும் சென்றுள்ளார்.
நடிகரும், கார் ரேசருமான அஜித்குமாரின் தாயார் மோகினி நேற்று காலை மரணமடைந்தார். 89 வயதான அவர் உடல்நலக்குறைபாடு காரணமாக இயற்கை எய்தியாக குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டது. துயாயில் இருந்த அஜித்குமார் தகவலறிந்து நேற்று மாலையே சென்னை வந்தடைந்தார். அதேநேரம், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், இறுதி மரியாதைக்காக தாயாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர் என பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் தனது சொந்த வாகனத்தில் சென்ற முதலமைச்சருடன் நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார். அவர்களை அஜித் வாசலுக்கே வந்தே உள்ளே அழைத்தார். அந்த நேரம், நண்பர் அஜித்குமாரை கட்டிப்பிடித்து முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார். தொடர்ந்து த்ரிஷாவும் அஜித்திற்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
Tamil Nadu chief minister C Joseph Vijay and actor Trisha Krishnan visited actor Ajithkumar's residence to pay homage to the departed soul, Mohini Amma, Ajithkumar's mom, in Chennai on 30-05-2026. pic.twitter.com/r8GH39JhAf
— A Selvaraj (@Crime_Selvaraj) May 30, 2026
முன்னதாக முதலமைச்சர் விஜய் தரப்பில் வெளியான அறிக்கையில், “அருமை நண்பர் த அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய போட்டியாளர்களாக விஜய் மற்றும் அஜித் கருதப்படுகின்றனர். ஆனால், தனிப்பட்ட வாழ்வில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிகக் வேண்டும் என்பதும் பல ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரையும் சேர்த்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்தால், இப்படி ஒரு சோக நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துவிட்டதே என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, விஜய் உடன் நடிகை த்ரிஷா சென்றதை சிலர் விமர்சித்து வருகின்றனர். அரசு பாதுகாப்பில் எப்படி ஒரு தனிநபரை முதலமைச்சர் அழைத்துச் செல்லலாம் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரம், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது தவறு எனவும், துக்க வீட்டில் கூட அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தவெகவினர் தெரிவித்து வருகின்றனர்.