சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘ஜென்சி திமுக மீட் அப்’ (Gen Z DMK Meet up) நிகழ்ச்சியில், அண்மையில் நடந்த தேர்தல் தோல்வி தந்த ரணத்தோடு இளைஞர் ஒருவர் ஆற்றிய விறுவிறுப்பான உரை சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. “இந்தக் கூட்டத்தை எலக்ஷனுக்கு முன்னாடியே நடத்தியிருக்கலாம் எனப் பலர் கூறினர்; ஆனால் தேர்தலுக்கு முன்னாடி நடத்தியிருந்தால் இந்த கூட்டம் வந்திருக்காது” என்று அதிரடியாகத் தொடங்கிய அந்த இளைஞர், “கலைஞரின் திட்டங்களால் படித்து, இன்று ஐடி (IT) துறை முதல் ஐஏஎஸ் (IAS) பணி வரை உயர்ந்த நாம், நம் கடமையைச் செய்யத் தவறிவிட்டோம்.
கூட வேலை செய்பவன் ‘நடிகர் (விஜய்) வராரு, அவருக்கு ஓட்டுப் போடனும்’ என்று பேசும்போது, நாம் உரக்கப் பேசத் தவறியதால்தான் இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற சங்கடமும் குற்ற உணர்ச்சியும்தான் நம்மை இன்று இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது” என உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். மேலும் விஜய்யின் தவெக-வை அடியோடு சாடிய அவர், “ஏண்டா, நடிகருக்கு என்னடா தெரியும்? இங்க ஒரு தலைவர் (மு.க.ஸ்டாலின்) மக்களுக்காக களத்தில் நின்றுகொண்டிருக்கிறார், இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுகிறார், மாநில சுயாட்சிக்காகப் பேசுகிறார், இந்தியாவிலேயே பெண்களின் உரிமைக்காகப் குரல் கொடுக்கிறார்; இவர் தலைவரா, அவர் தலைவரா?” என மேடையிலேயே ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார்.
கலைஞரால் பயனடைந்த ஒட்டுமொத்த இளைஞர்களும் தங்களின் தவறை உணர்ந்து, மீண்டும் தமிழ்நாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆள வேண்டும் என்பதற்காக ஒன்று திரள வேண்டும் என அவர் முழங்கிய பேச்சு, தற்போது இணையத்தில் மிகப்பெரிய அரசியல் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.