Top 10 News Headlines: திருவள்ளுவருக்கு காவி சாயம்.. ஐபிஎல் ஃபைனல்.. கார் ஏற்றி பெண் கொலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
பேச்சி ஆவுடையப்பன் May 31, 2026 02:14 PM
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிகப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு தமிழக அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தென்காசியில் பைக்கில் வந்து கும்பல் ஒன்று பலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி மறைவிற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து ஊழியர்களும் முறையாக பணியில் இருக்கின்றனரா என்ற தகவலை கேட்டறிந்தார்.
சென்னை கோயம்பேட்டில் செயல்படும் பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இலங்கை தமிழ் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக ராகுல்காந்தி தொலைபேசி மூலம் அழைத்து பேசியதாக மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். அரசியலை தாண்டி கஷ்ட காலத்தில் தோள் கொடுத்ததாகவும் ராகுலை புகழ்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் ஒருமுறை கோப்பையை வென்ற நிலையில் இரண்டாவது முறையாக வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிவகங்கையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு பாதுகாப்பு, அடைக்கலம் வழங்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் இந்த கல்வெட்டுகள் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.
கர்நாடகவின் புதிய முதலமைச்சராக டி.கே.ஷிவக்குமார் பொறுப்பேற்கவுள்ளார். இவரது பதவியேற்பு விழா ஜூன் 3ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது.
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு 6 மூலம் வெளியான தகவலின்படி தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் பிரசவத்திற்கு முன், பின் சுகாதார பராமரிப்பு மோசமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யமுனா நதியின் நீர்மட்டம் குறைந்ததால் டெல்லிக்கு 1,000 கியூசெக்ஸ் தண்ணீர் வழங்கப்படும் என ஹரியானா உறுதியளித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்துவதாக இளைஞர் ஒருவர் கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.