தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட ‘நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்’ பங்கேற்று உரையாற்றினார். திருச்சி தனியார் கல்லூரி மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், எதிர்க்கட்சியான திமுகவின் போதைப்பொருள் மேலாண்மை மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுகவும், மற்றும் சிலரும் தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன், ‘போதைப்பொருளை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை’ என என்னை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
திமுக தனது கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கிய போதைப்பொருள் கலாச்சாரத்தின் மோசமான விளைவால்தான், தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது. அந்த ‘மாடல்’ அரசு, போதைப்பொருளை ஆரம்பத்திலேயே முனையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், இன்று பல குழந்தைகளையும் பெண்களையும் நாம் இழந்திருக்க மாட்டோம். எல்லாவற்றையும் நீங்கள் செய்துவிட்டு, இப்போது அனைத்துப் பழியையும் என் மீது போடுகிறீர்கள்.
ஆனால், மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை இந்த விஜய் நிச்சயம் உருவாக்குவான். இதற்காகத்தான் தற்போது திறமையான காவல்துறையினரைக் கொண்ட தனிப் படையை நியமித்துள்ளோம். மேலும், அடுத்த வாரம் முதல் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய ‘சிங்கப் பெண் அதிரடி படை’ அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார்.