தங்கத்தை எப்போதும் மக்கள் அட்ஷய பாத்திரமாகவே பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி வருகிளார்கள். மேலும் அத்தியாவசிய தேவைக்கு தங்க நகைகளை அடகு வைக்கவோ, விற்பனை செய்யவோ முடியும் என்ற காரணத்தாலும் மக்கள் தங்க நகைகளை எதிர்கால சேமிப்பாகவே கருதுகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டிருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகில் பல்வேறு நாடுகளில் ஏற்படும் போர் காரணமாக பங்கு சந்தையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பு என கருதி தங்கத்தில் அதிகளவு முதலீட்டை செய்து வந்தனர். இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா இடையே நேற்று மீண்டும் போர் உருவாகியுள்ளதால் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியுள்ளது.
தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக தங்கத்தின் விலை சரிந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 400 ரூபாய் குறைந்து 13,800 ரூபாய்க்கும் சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து 1,10.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல வெள்ளியின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா இடையே போர் காரணமாக தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.