DMK Stalin: திமுகவின் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த ஸ்டாலின் பரிசீலித்து வருகிறராம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆன விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திடம், திமுக தனது ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய, அறிவாலயம் தரப்பில் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில் சாதி மற்றும் மத ரீதியில் கட்சிக்கு இருந்த வாக்கு வங்கியை திமுக இழந்துள்ளது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக வலியுறுத்தப்பட்டுள்ளதாம். அதனை மீண்டும் வலுப்படுத்த கட்சியில் உடனடியாக பல மாற்றங்களை மேற்கொள்வது குறித்தும் தலைமை பரிசீலித்து வருகிறதாம்.
கட்சியின் திட்டங்கள் தொடர்பாக பேசிய திமுக நிர்வாகிகள், “சட்டமன்ற தேர்தலின் போது தனக்கு மக்களிடையே நிலவும் தனிப்பட்ட ஆதரவு என்பதை தாண்டி, சமூக பிரதிநிதித்துவ அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியதும் விஜயின் தவெகவிற்கு கிடைத்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனால் சாதி மற்றும் மதங்களை கடந்து மிகப்பெரிய அளவிலான வாக்குகளை இரண்டு வயது கட்சி அறுவடை செய்துள்ளது. அதேநேரம், காலம் காலமாக இருந்து வந்த சாதி மற்றும் மத அடிப்படையிலான திமுகவின் வாக்கு வங்கி வீழ்ச்சி கண்டது கட்சியின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாக அமைந்தது” என குறிப்பிடுகின்றனர்.
விஜயின் வருகையால் கிறிஸ்துவ சமூக வாக்குகள் முழுமையாக தவெக பக்கம் சாய்ந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக உடன் பயணித்து வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது. இதனால் அறிவாலயத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, கட்சியின் கட்டமைப்பில் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற வேண்டிய கட்டாயத்திற்கு திராவிட கட்சி தள்ளப்பட்டுள்ளது.
திமுகவில் தற்போது கனிமொழி கருணாநிதி, ஐ. பெரியசாமி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, பொன்முடி மற்றும் சாமிநாதன் என மொத்தம் 7 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 10 உயர்த்தி சிறுபான்மை சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க தலைமை பரிசீலித்து வருகிறதாம். முக்குலத்தோர் சமுதாயத்திற்கு ஐ. பெரியசாமி மற்றும் திருச்சி சிவாவும், பட்டியலின சமுதாயத்திற்கு ஆ. ராசாவும், கவுண்டர் சமுதாயத்திற்கு சாமிநாதனும் மற்றும் அருந்ததியினர் சமுதாயத்திற்கு அந்தியூர் செல்வராஜும் பிரதிநிதிகளாக உள்ளனர். இந்நிலையில் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து நாடார், நாயுடு மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட உள்ளதாம்.
தேர்தல் தோல்வியை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுக்களின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டதும், அதன் முடிவில் திமுகவில் பல முக்கிய மாற்றங்கள் அரங்கேற உள்ளனவாம். வயது மூப்பு காரணமாக துரைமுருகனை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறதாம். அப்படி நடந்தால் அந்த இடத்திற்கு வர டி.ஆர். பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். அந்த பதவி நிரப்பப்பட்ட பிறகு பல அதிரடி மாற்றங்கள், புதிய தலைமுறை வாக்காளர்களை குறிவைத்து முன்னெடுக்கப்படும் என கூறப்படுகிறது.