Vijay BJP: காங்கிரஸ் உடனான கூட்டணி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் என்ன முடிவெடுக்க உள்ளார் என்பது, அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என கூறப்படுகிறது.
முதலமைச்சரான பிறகு இரண்டாவது முறையாக டெல்லி சென்ற விஜய், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்திற்கான நிதி தேவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதோடு, துணை குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் தான், முக்கிய பதவியில் உள்ள தமிழர் மூலமாக விஜய்க்கு மத்திய அரசு தகவல் ஒன்றை கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் முதலமைச்சரின் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குடியரசு துணை தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணனை, முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் சந்தித்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்ட நிலையில், தவெகவின் கூட்டணி தொடர்பாகவும் பேசப்பட்டதாம். குறிப்பாக காங்கிரசுடன் கூட்டணி வைத்தது மட்டுமின்றி, அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்து இருப்பதை பாஜக தலைமை விரும்பவில்லை என்ற தகவலும் விஜயுடன் பகிரப்பட்டதாம். தவெகவின் இந்த செயல் தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரசை வளர்த்துவிடும் விதமாக உள்ளதாகவும், மத்திய அரசின் ஆதரவு வேண்டும் என விரும்பினால் காங்கிரசிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது என அறிவுரை வழங்கப்பட்டாதகவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவில் தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை பெறாததால் அதிமுகவின் ஆதரவை நாடி வரும் என்றே பாஜக எதிர்பார்த்து இருந்தது. ஆனால், தங்கள் மீதான மக்களின் நல்லெண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், மதச்சார்பற்ற அரசுக்கு ஆதரவு அளிக்கும்படி திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடினார். பாஜகவிற்கு அதிகாரம் கிடைக்கக் கூடாது என்ற நோக்கில், பரப்புரையின் போது எதிரும் புதிருமாக இருந்த பல கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு அளித்தன. இதனால் அதிமுக - பாஜகவின் கூட்டணியின் ஆதரவு இன்றியே விஜய் முதலமைச்சர் ஆனார். இதனை டெல்லி தலைமை சற்றும் விரும்பவில்லையாம். காரணம், ஆரம்பம் முதலே அவரை கூட்டணிக்குள் இழுக்க மத்திய அரசு எடுத்த பல முயற்சிகளும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
விஜய் மீதான அதிருப்தியை அவரது முதல் டெல்லி பயணத்திலேயே மத்திய அரசு வெளிப்படுத்தியதை வெளிப்படையாகவே காண முடிந்தது. பிரதான எதிர்க்கட்சியை சேர்ந்த கேரள முதலமைச்சர் சதீஷன் உடனான பிரதமரின் ஆலோசனை 40 நிமிடங்கள் வரை நீண்டது. அதுபோக அமித் ஷா உள்ளிட்ட பலரையும் அவர் சந்தித்தார். ஆனால், விஜய் உடனான சந்திப்பை பிரதமர் 10 நிமிடங்களில் முடித்துக்கொண்டார். அமித் ஷாவை இதுவரை சந்திக்கவே முடியவில்லை. அதிமுக - பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி, தவெக ஆளுங்கட்சியாக உருவெடுத்தது மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததற்கான பின்விளைவு தான் எனவும் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது துணை குடியரசு தலைவர் வாயிலாகவும், காங்கிரசிடம் இருந்து சற்று விலகியே இருங்கள் எனவும் பாஜக தகவல் தெரிவித்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் நிலவும் பாஜகவிற்கு எதிரான சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் நேரத்தில், ஏதேனும் ஒரு தேசிய கட்சியின் ஆதரவு தங்களுக்கு இருப்பது அவசியம் என கருதியே காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பதை விரும்புகிறாராம். மதச்சாற்பற்ற கூட்டணி என்ற பிம்பம் மற்றும் டெல்லியில் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஒரு வலுவான சக்தியாகவும் காங்கிரசை நம்புகிறாராம். ஆனால், தங்கள் கொடுத்துள்ள பல வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசின் ஆதரவு அவசியம் என்பதால், அவர்களின் ஆலோசனையை ஏற்று காங்கிரஸ் உடனான நெருக்கத்தை விஜய் குறைத்துக்கொள்வாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.