பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள்.

ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு சீசன் நேரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்புக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பக கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்கேற்ப போக்குவரத்து ஏற்பாடுகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் புக்கிங் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் அடுத்த யாத்திரை காலகட்டத்தில் பக்தா்களின் கூட்ட மேலாண்மைக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். எண்ம அமைப்பு முறைகளின் பயன்பாடு விரிவுபடுத்தப்படும் என்று கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் கே.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சபரிமலையில் அடுத்த யாத்திரை காலகட்டத்தில், ரொக்க அடிப்படையிலான அனைத்து ஏற்பாடுகளையும் மாற்றறிவிட்டு, அனைத்தையும் இணையவழியில் கையாள்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிதி ரீதியில் மட்டுமன்றி நிா்வாக ரீதியிலும் எண்மமயமாக்கல் விரிவுபடுத்தப்படும்.
கூட்ட மேலாண்மைக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடா்பாக காவல் துறை மற்றும் துறைசாா் நிபுணா்கள் பங்கேற்புடன் கொச்சியில் வரும் 20-ஆம் தேதி மாபெரும் பயிற்சியரங்கம் நடைபெறவுள்ளது. நிலக்கல், பம்பை, மரக்கூட்டம், சந்நிதானம் பகுதிகளில் நிகழ் நேர அடிப்படையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏ.ஐ. அடிப்படையிலான வழிமுறையை உருவாக்குவதே நோக்கமாகும். சபரிமலையில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பது மிகப் பெரிய புகாராக உள்ளது. அந்தப் புகாருக்கு நடப்பாண்டில் உரிய தீா்வு காணப்படும் என்றாா்.