‘ஐயப்பனுக்கு அபிஷேக நெய்யிலும் ஊழலா?’ – சபரிமலை முறைகேட்டில் நீதிமன்றம் கடும் கண்டனம்.
நாகராஜ் June 13, 2026 03:14 PM

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அபிஷேக நெய் விற்பனை முறைகேடு தொடர்பாக, மூத்த அதிகாரி தலைமையில் மீண்டும் மறு விசாரணை நடத்தி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளதா? என்பதை கண்டறியும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் வினியோக கவுன்டர்களில், மகர விளக்கு பூஜைக் காலத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 16,000க்கும் மேற்பட்ட நெய் பாக்கெட்டுகளின் விற்பனை பணம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில், பக்தர்களுக்கு நெய் பாக்கெட்டுகளை விற்பனை செய்து, அதற்குரிய முறையான ரசீதுகளை வழங்காமல் ஊழியர்கள் பணத்தை முறைகேடு செய்துள்ளதை கண்டறிந்தனர். இதன்மூலம், 35 லட்சம் ரூபாய் வரை நெய் விற்பனையில் மோசடி நடந்ததும் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய தேவஸ்வம் சிறப்பு அமர்வு முன் அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது நீதிபதிகள், 'ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் நெய்யில் கூட ஊழலா? என, தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


இதைத்தொடர்ந்து அவர்கள் பிறப்பித்த உத்தரவு, இந்த விவகாரத்தை, கணக்கு தணிக்கை தவறு என சாதாரணமாக கடந்துவிட முடியாது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் வழக்கை முடிக்க பரிந்துரைக்கப்பட்டதை ஏற்க முடியாது. ஒரு மூத்த அதிகாரியை கொண்டு, இந்த நிதி முறைகேடு குறித்து விரிவாக மறு விசாரணை நடத்த வேண்டும்.

இந்த புகாரில், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே, விரிவான விசாரணை நடத்தி புதிய அறிக்கையை, அடுத்த நான்கு வாரத்திற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, ஜூலை 15க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.