இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மத்திய அரசு 15,000 ரூபாய் ஊக்க தொகையாக வழங்குகிறது. இந்த பணம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி இதற்கு விண்ணப்பம் செய்வது என்பன உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

மத்திய அரசு புதிதாக வேலைக்குச் சேரும் தனியார் துறை ஊழியர்களுக்காக வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் (Employment Linked Incentive - ELI Scheme) ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இதனை பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) என அழைக்கின்றனர். இந்தத் திட்டத்தின்படி, தகுதியுள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் 15,000 ரூபாய் வரை இலவச ஊக்கத்தொகையை வழங்குகிறது.
யாருக்கெல்லாம் ரூ.15,000 கிடைக்கும்?
நீங்கள் இதற்கு முன்பு எந்த நிறுவனத்திலும் பிஎஃப் கணக்கு இல்லாமல், முதல்முறையாக ஒரு முறைப்படியான வேலையில் சேரும் இளைஞராக இருக்க வேண்டும்.உங்களுடைய மாதச் சம்பளம் ரூ. 1,00,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். நீங்கள் வேலைக்குச் சேரும் நிறுவனம் பிஎஃப் (EPFO) அமைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 1 ஆகஸ்ட் 2025 முதல் 31 ஜூலை 2027 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய வேலைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
இந்த பணம் எப்படி கைக்கு வரும்?
மத்திய அரசு வழங்கும் 15,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு இரண்டு தவணைகளாக அனுப்பி வைக்கப்படும். நீங்கள் புதிய வேலையில் சேர்ந்து, தொடர்ந்து 6 மாதங்கள் வெற்றிகரமாகப் பணிபுரிந்த பிறகு இந்த முதல் தவணைத் தொகை உங்கள் கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் அதே வேலையில் 12 மாதங்கள் நிறைவு செய்ய வேண்டும். இதனுடன், EPFO போர்ட்டலில் உள்ள ஒரு சிறிய Financial Literacy Course ஐ ஆன்லைனில் படித்து முடிக்க வேண்டும். அதன் பிறகு இரண்டாம் தவணைத் தொகை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பம் செய்வது?
உங்களுடைய நிறுவனம் மூலமாக பிஎஃப் கணக்கு தொடங்கி உங்களுக்கான UAN (Universal Account Number) எண்ணைப் பெற வேண்டும். இதனை அடுத்து UMANG செயலியைப் பயன்படுத்தி Face Authentication மூலம் உங்கள் UAN-ஐச் சரிபார்க்க வேண்டும். உங்கள் பிஎஃப் கணக்கு, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆகிய மூன்றும் சரியாக இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் நிறுவனம் இதற்கான இணையதளத்தில் விவரங்களை பதிவேற்ற வேண்டும். நீங்கள் முதல்முறையாக தனியார் நிறுவனத்தில் பிஎஃப் வசதியுடன் வேலைக்குச் சேர்ந்தால், உங்களுடைய ஆரம்பகாலச் செலவுகளுக்கும் சேமிப்பிற்கும் உதவும் வகையில் அரசாங்கம் வழங்கும் ஒரு பரிசு தொகையாக 15,000 ரூபாய் இருக்கும்.
நாட்டில் புதிதாக 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. புதிதாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு பிஎஃப் கணக்குடன் கூடிய சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்கும் அரசு இந்த திட்டத்தில் நிதி சலுகைகளை வழங்குகிறது.2025ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்திலேயே 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் 15,000 ரூபாய் பெற விண்ணப்பித்து முதல் தவணையை பெற்றுள்ளனர். இந்த திட்டத்தில் 15,000 ரூபாய் முழுமையாக கிடைக்க தொடர்ந்து ஓராண்டுக்கு நிறுவனத்தில் வேலை பார்த்திருக்க வேண்டும். அவர் பெயரில் புதிதாக பிஎஃப் கணக்கு தொடங்கி ஓராண்டுக்கு பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.