DMK TVK: திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ., பல்லவியை விமர்சித்த திமுகவினருக்கு, உதயநிதியை குறிவைத்து தவெகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் சென்னை மேயர் பிரியா மற்றும் தவெகவை சேர்ந்த திரு.வி.நகர் எம்.எல்.ஏ., பல்லவி இடையேயான நிகழ்வு, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான சமூக வலைதள மோதலை மேலும் அதிகரித்துள்ளது. மேயருக்கு தக்க பதிலடி தந்ததாக ஆளுங்கட்சியினர் பல்லவியை பாராட்டி வந்தனர். அதைதொடர்ந்து, சிங்கப்பெண் அதிரடி படையின் தொடக்க விழாவில், பிறந்து சில வாரங்களே ஆன குழந்தையுடன் அவர் பங்கேற்று இருந்தார். இதனை குறிப்பிட்டு, விளம்பரத்திற்காக கைக்குழந்தையும் பல்லவி பொதுவெளியில் சுற்றி வருவதாக திமுகவினர் அத்துமீறி விமர்சித்து வருகின்றனர்.
பல்லவியை மோசமாக மட்டுமின்றி அநாகரீகமாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த பதிவுகளில், “மக்கள் பணி என கூறி விளம்பரத்திற்காக மட்டுமே கைக்குழந்தையுடன் பல்லவி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக கைக்குழந்தையை பயன்படுத்திக்கொள்கிறார். ரவுடி, மூளை வளர்ச்சி இல்லாதவர், ரீல்ஸ் வெறி பிடித்துள்ளது, பாரதி கண்ணம்மா சீரியலை மிஞ்சிவிட்டார்” என்பன போன்ற வசனங்களை எல்லாம் கொண்டு கடுமையாக வசைபாடி வருகின்றனர். ஒரு சிலர் உண்மையாகவே பல்லவி மீதும், அவரது குழந்தையின் நலனை கருதியும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
பல்லவியை விமர்சிக்கும் திமுகவினருக்கு எதிராக தவெகவினர் களமிறங்கி கடுமையான பதிலடி தந்து வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளில், “உண்மையான அக்கறை கொண்டு அறிவுரை வழங்கும் நபர்களுக்கு நன்றி. ஆனால், தாய்மையை சிறுமைப்படுத்தும் விதமாக பேசுவது தான் திமுக போல. இதையெல்லாம் ஒஜி திமுக இப்படி தான் இருக்கும் என பதிவிடுவது அந்த கட்சி எவ்வளவு மிருகத்தனமானது, இரக்கமற்றது என்பதை உணர்த்துகிறது” என சிலர் சாடி வருகின்றனர். மேலும் சிலர், “சுய விருப்பத்தின் பேரில் தனது குழந்தையுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது என்பது பல்லவியின் முடிவு. அதனால் வரும் சாதக, பாதகங்கள் அனைத்தையும் எதிர்கொள்ளப்போவது அவர் தானே.அப்படி இருக்கையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, பெண்மையை மட்டுமின்றி தாய்மையையும் மோசமாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தோல்வியின் விரக்தியால் மதியிழந்து உடன்பிறப்புகள் சகட்டுமேனிக்கு புலம்பி வருகின்றனர்” எனவும் விமர்சித்து வருகின்றனர்.
தவெகவின் மற்றொரு தரப்பினரோ நேரடியாக உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து பதிலடி தந்து வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளில்,”பிறந்து சில வாரங்கள் ஆன குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வதை விமர்சிக்கும் உடன்பிறப்புகள், பிறந்து 48 வருடங்கள் ஆன பிறகும் கூட தனது குழந்தையை உங்களது கட்சி தலைவர் தூக்கி சுமந்து கொண்டு வருகிறாரே? அதைபற்றி வாய் திறக்கமாட்டீர்களா?.. காலம் காலமாக கட்சிக்கு உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களை குனியவைத்து, அவர்களது முதுகில் ஏற்றி தனது மகனை துணை முதலமைச்சராக்கினாரே உங்கள் ஸ்டாலின்? அதை பற்றி பேசமாட்டீர்களா?.. எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தாலும், மகனை எதிர்க்கட்சி தலைவராக்கி திமுக தங்களது குடும்ப சொத்து தான் என ஸ்டாலின் மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளதை குறித்து ஏன் மவுனம் காக்கிறீர்கள்?.. கொத்தடிமை என்பதையே பெருமையாக அறிவித்துக்கொள்ளும் உங்களிடமிருந்து இந்த கேள்விகளுக்கான பதில்களை எல்லாம் எதிர்பார்ப்பது நேர விரையம் தான்” என காட்டமாகவும், ஆவேசமாகவும் தவெகவினர் களமாடி வருகின்றனர்.
Oopis:-
— குட்டி (@Ak_Annna_) June 12, 2026
Pallavi with one. Stalin with 45
Month baby. 45 yrs baby pic.twitter.com/aZmUf58UcX