சேலத்தில் 1 1/2 வயது குழந்தைக்கு பெற்ற தாயே விஷம் வைத்து கொலை செய்து வலிப்பு வந்ததாக நாடகமாடிய நிலையில் இரண்டு மாதத்துக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவருக்கும் சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த லலிதா (21) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஹர்சன் ராஜ், ஒன்றரை வயதில் புவன்ராஜ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து லலிதா தனது தாய் வீடான சிறுவாச்சூரில் வசித்து வருகிறார்.
திருமலை வாசுதேவன் மூத்த மகனான ஹர்ஷன் ராஜ் என்ற குழந்தையை வளர்த்து வருகிறார். லலிதா 1 1/2 வயது குழந்தை புவன் ராஜை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் லலிதா கட்டிட வேலைக்கு சென்றுள்ளார் அப்போது கட்டிட தொழிலாளிடம் லலிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தனது கள்ளக்காதலுடன் சந்தோஷமாக இருக்க முடியாமல் அவரது குழந்தை புவன்ராஜ் இடையூறாக இருப்பதாக கருதி கடந்த ஏப்ரல் மாதம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் வலிப்பு வந்ததாக கூறி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் இறப்பில் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பரிசோதனையில் விஷம் அருந்தி குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் தலைவாசல் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அறிந்த லலிதா தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் பூர்ணிமா தலைமையில் தனிப்படை அமைத்து லலிதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தனது சந்தோஷத்திற்கு குழந்தை இடையூறாக இருப்பதாகவும் இதனால் சாப்பாட்டில் விஷம் வைத்து வலிப்பு வந்ததாக நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்தது.
ஒன்றரை வயது குழந்தையை பெற்ற தாயே விஷம் வைத்து கொலை செய்து நாடகம் ஆடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.