NEET Re Exam Security: மருத்துவ படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜுன் 21ம் தேதி நாடு முழுவதும் 500-க்கும் அதிகமான மையங்களில் நடைபெற உள்ளது.
2026-27 கல்வியாண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும், 551 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடைபெற்றது. சுமார் 23 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக கடந்த 7ம் தேதி தகவல் வெளியாகவே, தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பலரையும் கைது செய்துள்ளது. அதேநேரம், தேர்வு முகமையின் பல்வேறு தேர்வுகளிலும் குளறுபடி நடைபெறுவது தொடர்கதையாகி உள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக களமாடி வருகின்றன. இதனிடையே, வரும் ஜுன் 21ம் தேதி அன்று நீட் மறுதேர்வு நடத்தப்பட்ட உள்ளது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வதில் தொடங்கி, விடைத்தாளகளை பாதுகாப்பாக கொண்டு செல்வது வரையிலான நீட் தேர்வை, முற்றிலுமாக பாதுகாப்பானதாகவும், எந்தவித குளறுபடிகளும் நிகழாத வண்ணமும் நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராணுவ விமானங்களை பயன்படுத்துவது, பாதுகாப்பு வீரர்களை களமிறக்குவது, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை என அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
நீட் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் ஏற்கனவே தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. தற்போது மறுதேர்வு நடத்துவதுடன், அதற்கான வினாத்தாள்களுக்கு ராணுவ பலத்துடன் பாதுகாப்பு வழங்குவது என்பது, நீட் தேர்வு குறித்த பார்வையை ஒட்டுமொத்தமாகவே மாற்றும் விதமாக உள்ளது. ஒரு தேர்வுக்கு இவ்வளவு கெடுபிடிகள் என்பது மாணவர்களுக்கே ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதகாவும் கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.