தங்கத்தின் விலையானது கைக்கு எட்ட முடியாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இந்த வருடமோ 1 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் தங்க நகையை நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதே நேரம் தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையானது அதிகரிக்க தொடங்கியது.
தங்கத்தை வாங்க முடியாத மக்கள் வெள்ளி மீது முதலீட்டை அதிகரித்தனர். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான நிலையில்,2024 ஆண்டில் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000 முதல் ரூ.90,000 வரை உயர்ந்தது. 2025 ஆம் ஆண்டு இறுதியில் வெள்ளியின் தேவை அதிகரிப்பால் விலை ஒரு லட்சத்தை தாண்டியது.இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
பின்னர் சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தை திருத்தங்கள் காரணமாக ரூ.2,50,000 முதல் ரூ.2,80,000 வரையான விலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மட்டுமல்ல வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஏபிபி நாடுவிற்கு சிறப்பு தகவல் தெரிவித்த தங்கம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறுகையில், வெள்ளியில் முதலீடு செய்ய தற்போது நல்ல தருணம் என கூறியுள்ளார். தற்போது ஒரு கிலோ 2 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், வரும் நாட்களில் புதிய உச்சத்தை வெள்ளி விலை எட்டும் என தெரிவித்துள்ளார். எனவே வெள்ளியில் முதலீடு செய்ய இது நல்ல சான்ஸ் எனவும் கூறியுள்ளார்.
அந்த வகையில் தற்போது அமெரிக்கா- ஈரான் இடையே போர் முடிவிற்கு வந்ததையடுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தங்கம் மற்றும் வெள்ளி ராக்கெட் வேகத்தில் புதிய உச்சத்தை தொடும் என தெரிவித்துள்ளார். எனவே தங்கத்தின் மீது முதலீடு செய்ய முடியாவர்கள் வெள்ளி மீது முதலீடு செய்ய நல்ல தருணமாக உள்ளது.