"ஆதார் வெறும் அடையாள அட்டை மட்டுமே; இருப்பிடச் சான்றாகப் பயன்படுத்த தடைக் கோரி பொதுநல வழக்கு!
Dinamaalai June 16, 2026 05:48 PM

இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையை முகவரி அல்லது இருப்பிடச் சான்றாகவும், பிறப்புச் சான்றாகவும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அதனை வெறும் 'அடையாளச் சான்றாக' மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் முக்கியப் பிரமுகரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய இந்தத் தொடர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

ஆதார் சட்டம் மற்றும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி, ஆதார் என்பது ஒரு நபரின் பயோமெட்ரிக் மற்றும் மக்கள் தொகை விபரங்களை உள்ளடக்கிய 'அடையாளச் சரிபார்ப்பு' ஆவணம் மட்டுமே ஆகும். தற்போது நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில், வங்கிக் கணக்குகள் தொடங்குவது முதல் பல்வேறு சேவைகளுக்கு ஆதாரை இருப்பிடச் சான்றாகவும், வயது அல்லது பிறப்புச் சான்றாகவும் தவறாகக் கோரி வருகின்றனர். இது உண்மையான சட்ட விதிகளுக்குப் புறம்பானது.

ஆதாரை இருப்பிடச் சான்றாக ஏற்பதனால், போலி முகவரிகள் மூலம் எளிதாக ஆதார் பெற்று, அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இதனை வெறும் அடையாள சரிபார்ப்புக்கு மட்டுமே பயன்படுத்த அரசுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

சட்டப்படியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த மாறுபட்ட பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி மோகனா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

ஏற்கனவே இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்கள், "ஆதார் என்பது குடியுரிமைக்கோ அல்லது பிறப்புத் தேதிக்கோ சான்றல்ல" என்று சில வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு இந்த மனுவின் மீது எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் பிறப்பிக்கப் போகும் உத்தரவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.