தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2 வருடங்களுக்கு முன்பாக கட்சியை தொடங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளார். அதே நேரம் எதிர்கட்சியாக இருந்த அதிமுக 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அக்கட்சி நிர்வாகிகள் தவெகவிற்கு பல்டி அடித்து வருகிறார்கள். தற்போதைய எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரன் இன்று தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
சி.மகேந்திரன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம ஆகியவற்றின் தமிழகத் செயலாளர் பொறுப்புகளை வகித்தார். மேலும் CPI-யின் தமிழ்நாடு மாநிலத் துணைச் செயலாளராக 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். மாநிலச் செயலாளர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதலைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் மூத்த தலைவராக பார்க்கப்பட்ட சி.மகேந்திரன் இன்று ஆளுங்கட்சியான தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தவெகவில் தலைமை அலுவலகமாக பனையூரில் நடைபெற்ற விழாவில் சி.மகேந்திரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.