“அரசியல் அறுவை சிகிச்சை.. ஒரே பிரசவத்தில் 6 துரோகிகள்..! ஏக்நாத் ஷிண்டேவை நார்நாராகக் கிழித்த சஞ்சய் ராவத்..!!!”
SeithiSolai Tamil June 24, 2026 03:48 PM

மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா  கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை எம்பிக்கள், திடீரென பிரிந்து சென்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனா பிரிவில் இணைந்தனர். உத்தவ் தாக்கரேவின் எம்பிக்களைத் தங்கள் பக்கம் இழுத்த இந்த நடவடிக்கையை ‘ஆபரேஷன் டைகர்’  என்று ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தரப்பு வெற்றிகரமாகக் கொண்டாடி வருகிறது. இதனால் உத்தவ் தாக்கரேவின் முகாம் நாடாளுமன்றத்தில் பெரும் பலவீனமடைந்துள்ளது. இந்த அரசியல் அதிர்வலைகள் மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஷிண்டே தரப்பின் இந்த நடவடிக்கையை உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளரும், அக்கட்சியின் எம்பியுமான சஞ்சய் ராவத் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டேவின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘நந்தன்வன்’ இல்லத்தில் இப்போது ‘6 துரோகிகளின் தொட்டில்’ ஆடிக்கொண்டிருக்கிறது என்று மிகக் காட்டமாக விமர்சித்தார். கென்யப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்ததை ஒப்பிட்ட அவர், ஏக்நாத் ஷிண்டே ஒரு ‘சிசேரியன் அறுவை சிகிச்சை’ (அரசியல் அறுவை சிகிச்சை) மூலம் ஒரே பிரசவத்தில் 6 துரோகிகளைப் பெற்றெடுத்துள்ளார் என்று கிண்டலடித்தார். எம்பிக்கள் கட்சி மாறியதை துரோகம் என்று குறிப்பிட்ட அவர், துரோகிகளுக்கு தகுந்த மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார். உத்தவ் தாக்கரே தரப்பிலிருந்து சஞ்சய் ராவத் முன்வைத்துள்ள இந்த கடுமையான மற்றும் விசித்திரமான விமர்சனம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.