சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ;
முதலமைச்சர் விஜய் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எவ்வித அக்கறையும்
காட்டாமல் இருக்கிறார். அவரது ஆட்சியில் அரங்கேறி வரும் கோரச் சம்பவங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. முறையான பதிலும் சொல்லவில்லை.
இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தவர் விஜய். கடந்த காலங்களில் அவர் பேசிய கருத்துக்களுக்காக, தி.மு.க ஆட்சியில் இருந்த போது வழக்குத் தொடர்ந்திருந்தால், அவர் அரசியலை விட்டே ஓடியிருப்பார்.
சைதாப்பேட்டையில் தி.மு.க-வைச் சேர்ந்த 'ஜென் - சி' இளைஞர் ஒருவர்
தாக்கப்பட்ட விவகாரத்தில் புகார் அளித்து 3 நாட்கள் ஆகிறது. ஆனால், இதுவரை
காவல் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இன்னும் 24 மணி நேரத்திற்குள் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், தி.மு.க சார்பில் சைதாப்பேட்டை
காவல் நிலையம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஒன்று
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தி.மு.க இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் ஒரு போதும் பயப்படாது. ஜென்சி இளைஞர்கள் தி.மு.க-வை நோக்கி வருவதை விஜயால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விஜய் சட்டப் பேரவையில் ஆடியது போல வெளியிலும் ஆட
முடியாது.
த.வெ.க ஆட்சியில் ஒரே இரவில் பாலியல் குற்றம் செய்தவர்களை இந்த அரசு கைது செய்ததா ? ஆனால், இரவு 10 மணிக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை 12 மணிக்கே சென்று பிடிக்க காவல்துறை துடிக்கிறது. ஜென்சி இளைஞர்கள்
பேசுவதைக் கூட முதலமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
திருடனைப் பிடிப்பது போலக் காவல் துறையினர் வீடுகளுக்குச் செல்கிறார்கள். சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை வெளியிட ஒருவரைத் தடுத்தால், அதே செய்தியை ஒரு லட்சம் பேர் வெளியிடுவோம். தி.மு.க என்பது அடக்கு முறைகளையும், மிசா - வையும் பார்த்த கட்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.