தமிழக முதல்வர் விஜய் இன்னும் ஒரு நடிகராகவே செயல்பட்டு வருகிறார் என்றும், அவர் சட்டமன்றத்தை ஒரு ‘சூட்டிங் ஸ்பாட்’ மற்றும் ஸ்டுடியோ போல நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல், திமுக மீது குற்றம் சுமத்துவதையே முதல்வர் தனது பணியாகக் கொண்டுள்ளார் என்று சாடினார். மேலும், முதல்வர் விஜய் இன்னும் தேர்தல் மோடில் இருந்து சி.எம். மோடுக்கு மாறாமல், சினிமாவில் பேசுவதைப் போல ஏற்ற இறக்கத்தோடு பேசி வருவதாகவும், ஒரு முதலமைச்சர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகளை விடுத்து, கேமரா முன் வசனம் பேசுவதையே இப்போதும் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் குட்டிக்கதை பேசியதைக் குறிப்பிட்ட சிவசங்கர், “ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை சொல்வதைப் போல சட்டமன்றத்திலும் குட்டிக்கதை சொல்கிறார்; இதில் அவரது தந்தை குறித்துப் பேசியுள்ளார், ஆனால் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ‘என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை, புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் உள்ளார்’ என்று பேட்டி கொடுத்ததை அவர் மறந்துவிட்டாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறிய சைகையை முதல்வர் விஜய் செய்து காட்டியது அருவருப்பானது என்றும் இது சட்டசபையில் மாண்பு ஒரேடியாக முடிந்து விட்டதே காட்டுவதாகவும் கடுமையாக சாடினார். மேலும் அண்டை மாநிலத்தில் ரசிகை ஒருவர் உயிரிழந்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்தது போன்று உங்கள் மீதும் கரூர் சம்பவத்தில் வழக்கு போட்டிருந்தால் உங்கள் கேரியரின் உச்சம் கழன்றிருக்கும் என்றார்.