ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - வீரர் சுரேந்தர் சிங் உயிரிழப்பு - மேலும் 2 வீரர்கள் படுகாயம்!
Dinamaalai June 27, 2026 10:48 AM

அருணாசல பிரதேச மாநிலத்தின் மலைப்பகுதியில் இந்திய ராணுவ வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த ராணுவ வீரர் சுரேந்தர் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரு வீரர்கள் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாசல பிரதேச மாநிலம், மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள திரங் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் 3 ராணுவ வீரர்கள் வழக்கமான பணியில் பயணித்தனர். மலைப்பாங்கான வளைவுப் பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்துத் தகவலறிந்ததும், அப்பகுதியில் இருந்த பிற ராணுவப் பிரிவினர் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குப் போர்க்கால அடிப்படையில் விரைந்து சென்றனர். பள்ளத்தாக்கில் விழுந்த தாக்கத்தால் ராணுவ வாகனம் உருக்குலைந்து முழுமையாகச் சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 ராணுவ வீரர்களையும் மீட்புக் குழுவினர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். மீட்கப்பட்ட மூன்று வீரர்களுக்கும் முதலுதவி வழங்கப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலத்த காயமடைந்திருந்த சுரேந்தர் சிங் என்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி வீர மரணமடைந்தார். மேலும், வாகனத்தில் இருந்த மற்ற இரு வீரர்களுக்கும்  தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.