திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
குலசேகரன் முனிரத்தினம் June 27, 2026 03:14 PM

TVK Vijay: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், தவெக இளைஞரணியில் தனக்கு முக்கிய பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறாராம். 

போதைக்கு எதிராக களமாடும் தவெக..

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்தே தீருவேன் என்ற முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றுள்ளார். முதல் நாள் முதலே பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி பிரிவுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க. தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் விற்பனையே காரணம் என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி முதலமைச்சர் விஜயே குற்றச்சாட்டியுள்ளார். இதற்காக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுத்துறை சார்ந்த விஷயங்களை மேம்படுத்த விஜய் உத்தரவிட்டிருந்தார். 

வழக்குகளில் சிக்கும் தவெகவினர்..

இதற்காக சர்வதேச் போதை ஒழிப்பு தினமான நேற்று சென்னை மெரினாவில் முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.  ‘ஸ்டார்ட் ரன்... ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற பெயரில் காமராஜர் சாலையில் மாரத்தானை தொடங்கிய வைத்ததோடு, 3 கிலோ மீட்டர் தூரம் ஓடவும் செய்தார். இதனிடையே, தமிழ்நாட்டை போதையில்லா மாநிலமாக மாற்ற தீவிரமாக களமாடி வரும் முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் கடைகளை எப்போது முழுமையாக மூடப்போகிறார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. மற்றொருபுறம் தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் சிக்குவதும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

தவெகவில் ஜெகத்ரட்சகன் மகன்?

இந்த நிலையில் தான் மிகப்பெரிய மதுபான ஆலையான “அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் அண்ட் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட்” நிர்வகித்து வருபவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் மகனுமான ஜே. சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சந்தீப் ஆனந்த் தவெக தலைமையிடம் தனக்கு இளைஞர் அணி தலைவராக பதவி வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுவது, உட்கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அரசியலில் அனுபவம் இல்லாமல், கட்சிக்காகவும் உழைக்காமல் நேரடியாக மிகப்பெரிய பொறுப்பை ஒருவருக்கு வழங்குவது சரியா?” என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

இதையும் படியுங்கள்: CM Vijay: ”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?

காசுக்காக பதவியா?

மற்றொருபுறம், தமிழ்நாட்டின் TASMAC அமைப்பிற்கு முக்கிய மதுபான விநியோகஸ்தராக இருக்கும், திமுக எம்.பியின் மகனுக்கு தவெகவில் பதவி வழங்குவது எப்படி ஏற்புடையதாக இருக்கும்?  மதுபான வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் இளைஞர் அணியை வழிநடத்துவது எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்?” என்ற உட்கட்சியினர் பலரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம். இதுபோக,  போதையை ஒழிக்கூடிய தூய சக்தியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட தவெக, இதுபோன்ற நபர்களின் வருகையால் தீய சக்திகளின் கூடாரமாக மாறிவிடக்கூடும் என்பதையும் தலைமை பரிசீலிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, குட்கா வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அடுத்த வாரம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.