மானாமதுரை வைகையில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!
மானாமதுரை வைகை ஆற்றுப் படுகையில் இரவோடு இரவாக மணல், கிராவல் மண் கடத்தல்? – நடவடிக்கை கோரி விவசாயிகள் வலியுறுத்தல்.
இரவு நேரங்களில் மணல் கொள்ளை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை, கோச்சடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வைகை ஆற்றுப் படுகை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் மணல் மற்றும் கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிராவல் மண் தோண்டி எடுத்துச் செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு
உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி பெற்ற சில கிராவல் குவாரிகளில் இருந்து கிராவல் மண் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களைப் பின்பற்றாமல் மாற்று வழிகளில் சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து இயக்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி சில மணல் கொள்ளையர்கள் மேலும், சில இடங்களில் பட்டா நிலங்கள் மற்றும் கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் எவ்வித அனுமதியுமின்றி கிராவல் மண் தோண்டி எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையாக சேதம் அடைய வாய்ப்பு
அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்தால் மானாமதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் கிராமப்புற சாலையும் மானாமதுரையிலிருந்து இளையான்குடி செல்லும் கிராமப்புறச் சாலையும் கடுமையாக சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் , இதனால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிக வேகத்தில் இயங்கும் லாரிகளால் விபத்து அபாயம் அதிகரித்திருப்பதுடன், கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலும் உருவாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக மண் தோண்டப்படுவதால் நிலப்பரப்பில் ஆழமான பள்ளங்கள் உருவாகி, மழைக்காலங்களில் நீர் அவற்றிலேயே தேங்கிவிடுவதால் இயற்கையான நீர்வரத்து பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அய்யனார் குளம் உள்ளிட்ட பாசன நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டிய நீர் தடைபட்டு, விவசாய நிலங்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை
இவ்விவகாரம் தொடர்பாக, சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் கிராவல் லாரிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் விவசாயிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.எனவே, வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் காவல்துறை இணைந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் விரிவான கூட்டு ஆய்வு மேற்கொண்டு, இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி, சட்டவிரோத மணல் மற்றும் கிராவல் மண் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.