நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
ராகேஷ் தாரா July 04, 2026 01:44 AM

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், வெளியீட்டுக்கு முன்பே சமூக வலைதளங்களில் சர்ச்சையையும் சந்தித்தது. ஆனால், அந்த சர்ச்சைகளையும் தாண்டி தற்போது படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளின் போது நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய சில கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. இதையடுத்து, சில விஜய் ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். மேலும், 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை ஓடவிட மாட்டோம் என்றும், படத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் சில கணக்குகளில் பதிவுகள் வெளியாகின.

நெகட்டிவ் விமர்சனங்களைப் பரப்பிய விஜய் ஆதரவாளர்கள்

படம் இன்று அதிகாலை முதல் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், எக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஒரே மாதிரியான கருத்துகளுடன் பல பதிவுகள் வெளியிடப்படுவதால், இது திட்டமிட்ட நெகட்டிவ் பிரச்சாரமா என்ற கேள்வியும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

மறுபுறம், படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் முதல் பாகத்தின் பொழுதுபோக்கு அம்சங்களைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஷ்ணு விஷால்ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியின் நடிப்பு, குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய காமெடி காட்சிகள், ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. இதனால், சமூக வலைதளங்களில் நெகட்டிவ் பதிவுகள் பரவினாலும், திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை குறையவில்லை என திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களிலும் பல காட்சிகளுக்கு நல்ல அளவில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. வார இறுதி விடுமுறை என்பதால், குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. சமூக வலைதள விமர்சனங்களுக்கும், நேரடியாக படம் பார்த்த ரசிகர்களின் கருத்துகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாகவும், இறுதியில் ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்களின் திரையரங்கு வரவேற்பே தீர்மானிக்கும் என்பதையும் 'கட்டா குஸ்தி 2' வெளியீடு மீண்டும் நிரூபித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.