ஜூலை 4, 2026: எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவற்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உயிரி எரிபொருள் கலப்பு திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், எத்தனால் கலந்த எரிபொருளின் பயன்பாடு குறித்து பரவி வரும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மைலேஜ் சற்று குறையலாம் என விளக்கம்:எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் குறைகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மைலேஜ் சிறிதளவு குறைய வாய்ப்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், வாகனங்களின் செயல்திறன் மற்றும் வேக உயர்வு திறன் மேம்படும் என்றும் தெரிவித்தார்.
“எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்துவதால் மைலேஜ் குறையும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், எத்தனால் தற்போது பந்தய கார்கள் கூட பயன்படுத்தும் அளவுக்கு செயல்திறன் மிக்க எரிபொருளாக உள்ளது. இது வாகனத்தின் வேக உயர்வை மேம்படுத்துகிறது. இன்ஜின் ‘நாக்கிங்’ பிரச்சினையையும் குறைக்க உதவுகிறது. மைலேஜ் சற்று குறையலாம், ஆனால் அது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது” என்று ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
காப்பீடு ரத்து செய்யப்படாது:எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்ற தகவல்களையும் அமைச்சர் மறுத்தார். “எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு செல்லாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே அதுபோன்ற எந்த பிரச்சினையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: இ20 பெட்ரோல் குறித்து மத்திய அரசு கொடுத்த புதிய விளக்கம்.. கவனிக்க வேண்டியவை என்ன தெரியுமா?
அதிக எத்தனால் கலப்புக்கு வாய்ப்பா?மேலும், தற்போது நாட்டில் 20 சதவீத எத்தனால் கலப்பு மட்டுமே நடைமுறையில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் 25 சதவீதம் அல்லது அதற்கு மேல் எத்தனால் கலப்பை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்றும் அமைச்சர் கூறினார். எனினும், அதற்கு முன் தேவையான அனைத்து தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சோதனைகளும் நிறைவு செய்யப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என அவர் விளக்கினார்.
மின்சார, ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கும் இடமுண்டு:“இந்தியாவின் போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்கள், எத்தனால் கலந்த எரிபொருள் வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் அனைத்திற்கும் போதுமான இடம் உள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு எரிசக்தி ஆதாரங்கள் ஒன்றிணைந்து செயல்படும்” என்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இதற்கிடையில், 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கான தரநிலைகளை இந்திய தரநிலைகள் நிறுவனம் (BIS) ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும், இவ்வகை எரிபொருட்களுக்கு கலால் வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கைகள் உடனடியாக அதிக எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்துவதற்கான அறிகுறி அல்ல என்றும், அவை ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய பெட்ரோலியத் துறை பின்னர் விளக்கம் அளித்துள்ளது.