திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
பேச்சி ஆவுடையப்பன் July 04, 2026 07:44 PM

தான் வேலைப் பார்த்த வீட்டில் இருந்து வைர நெக்லஸை திருடிய பெண் ஒரு வருடம் கழித்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக சிக்கிய சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

டேராடூனில் உள்ள ஐடி பார்க் பகுதியில்   நிதீஷா வத்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 1ம் தேதி அங்குள்ள ராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தனது வைர நெக்லஸும் மற்ற நகைகளும் வீட்டில் வைத்திருந்தேன். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக அவை திடீரென ஒருநாள் காணாமல் போனது. ஒருவேளை நகையை மறந்து போய் வேறு எங்காவது வைத்திருந்தேனா அல்லது உறவினர்களிடம் கொடுத்திருந்தேனா என்பது தெரியாமல் குழம்பி வந்தேன். அதன் காரணமாக அவை திருடப்பட்டிருப்பதாக நான் நம்பவும் இல்லை. போலீசில் புகார் அளிக்கவும் இல்லை. 

ஆனால் சில நாட்களுக்கு முன்பு நான் என்னுடைய சமூக வலைதளக் கணக்கைச் சரிபார்த்தேன். அப்போது ரீல்ஸ் வீடியோவில் எனக்கு நன்கு பரீட்சையமான பெண் ஒருவர் தோன்றிய வீடியோ வந்தது. அதில் அப்பெண் அணிந்திருந்த நெக்லஸ் காணாமல் போன என் வைர நெக்லஸ் போல இருந்தது. தொடர்ந்து அப்பெண்ணின் சமூக வலைத்தள கணக்கை பார்வையிட்டால் என்னிடம் இருந்து காணாமல் போன நகைகளை அணிந்திருப்பதை கண்டுபிடித்தேன். எனவே அதனை மீட்டு தர வேண்டும்” என நிதீஷா தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ராஜ்பூர் காவல்துறையினர் நிதீஷா குறிப்பிடிருந்த சமூக வலைத்தளக் கணக்கை ஆராய்ந்தனர். மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜோஹ்ரி சாலையில் இளம்பெண் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் வீட்டு பணிப்பெண்ணாக ஐடி பார்க் பகுதியில் உள்ள நிதீஷாவின் வீட்டில் பணியாற்றியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் வீட்டு அறை ஒன்றில் இருக்கும் லாக்கரில் விலையுயர்ந்த நகைகள் இருப்பதை கண்டதும் அதனை திருடும் ஆசை எனக்கு வந்தது. இதனால் ஓராண்டுக்கு முன் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வைர மற்றும் தங்க நகைகளைத் திருடி வந்தேன். நிதீஷா என்மீது தீராத நம்பிக்கை கொண்டிருந்ததால் சந்தேகம் எதுவும் படவில்லை. நகைகள் காணாமல் போனது பற்றி திருட்டு என்ற எண்ணம் ஏற்படாதபடி அவரை நம்ப வைத்தேன். திருடப்பட்ட சில நகைகளை விற்க முயன்ற நிலையில் அது தோல்வியில் முடிவடைந்தது.

நகைகளை கைமாற்றி விடும் முன் அதனை போட்டு புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்தேன். அதன்மூலம் நிதிஷா அடையாளம் கண்டுக் கொண்டார் என அப்பெண் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.