“எல்லை மீறும் மேடைப் பேச்சுகள்.. தனிநபர் வன்மத்தை கக்குகிறார்களா அரசியல்வாதிகள்?”.. திமுக – தவெக மோதலில் திடீர் என்ட்ரி கொடுத்த கம்யூனிஸ்ட்.. அதிரடி அறிக்கை..!!
SeithiSolai Tamil July 04, 2026 06:48 PM

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் அவதூறாகப் பேசியதற்கும், அதற்குப் போட்டியாக கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்” எனப் பேசியதற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மேலும் ஜனநாயகத்தில் மாற்று அரசியல் கொள்கைகள் மீதும், அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதும் ஆரோக்கியமான விமர்சனங்களை வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் அதனைத் தாண்டி பொதுவெளியில் தனிமனிதர்களின் சொந்த வாழ்க்கையை இழிவுபடுத்துவதும், மிரட்டல் தொனியில் பேசுவதும் முற்றிலும் சட்ட அத்துமீறலாகும் என சிபிஐ மாநில பொதுச் செயலாளர் மு. வீரபாண்டியன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு அரசியல் களத்தில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்பறிந்து பொது வாழ்வில் உயர் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாக இருந்தாலும், மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரை காவல்துறையினர் பலவந்தமாக நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்த காவல் துறை நடவடிக்கையைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.