சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் பழையார் மற்றும் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர்களிடையே நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் மோதலில், மூன்று மீனவர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரு மாவட்ட எல்லையோர மீனவ கிராமங்களில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பழையார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் 14 மீனவர்கள், இன்று காலை தங்களது விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடல் பகுதிக்கு அருகே இழுவை வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 34 மீனவர்கள், அப்பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
பழையார் மீனவர்களின் விசைப்படகு, தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடலில் விரித்து வைத்திருந்த சுருக்குமடி வலையின் மீது எதிர்பாராதவிதமாக ஏறியதாகத் தெரிகிறது. இதில் தேவனாம்பட்டினம் மீனவர்களின் வலை அறுந்து சேதமடைந்தது, இதனால் ஆத்திரமடைந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள், பழையார் மீனவர்களின் படகை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடுக்கடலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம், சில நிமிடங்களிலேயே கடுமையான மோதலாக மாறியது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஒன்றுசேர்ந்து பழையார் மீனவர்களின் விசைப்படகிற்குள் அதிரடியாகப் புகுந்து பழையார் மீனவர்களைக் கொடூரமாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் பழையார் கிராமத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் பலத்த காயமடைந்து மற்ற மீனவர்கள் அவர்களை மீட்டு, உடனடியாக தங்களது படகு மூலம் பழையார் துறைமுக கரைக்குக் கொண்டு வந்தனர்.
கரையிறக்கப்பட்ட காயமடைந்த மூன்று மீனவர்களையும், அங்கிருந்த சக மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நடுக்கடலில் தாக்குதல் நடத்திய தேவனாம்பட்டினம் மீனவர்களில் இரண்டு பேரை, பழையார் மீனவர்கள் லாவகமாகப் பிடித்து தங்களது படகில் ஏற்றி பழையார் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், அவர்களை புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புதுப்பட்டினம் போலீசார் அவர்களிடம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த மோதல் சம்பவம் காட்டுத்தீ போல பரவியதால், மயிலாடுதுறை மாவட்டத்தின் பழையார் பகுதியிலும், கடலூர் மாவட்டத்தின் தேவனாம்பட்டினம் பகுதியிலும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க இரு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சினேகா பிரியா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக பழையார் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரிடமும், நேரில் பார்த்த சாட்சிகளிடமும் அவர்கள் விவரங்களைச் சேகரித்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து, பழையார் மீனவர்களால் பிடித்து வரப்பட்டு புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் இருவரையும், எல்லை அதிகார வரம்பின்படி கடலூர் மாவட்ட காவல்துறையினரிடம் மயிலாடுதுறை போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர். நடுக்கடலில் வலை அறுந்த விவகாரத்தில் மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் கடலோரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.