சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து பேசியது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
ரஜினி நடித்து வரும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமளித்து வருகின்றன. சமீபத்தில் சிறப்பான ப்ரோமோவோடு ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். தர்மன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
தர்மன் படம் குறித்து பேசிய அஸ்வத் மாரிமுத்து, “இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில், ரஜினி சார் போன்ற மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்து படம் இயக்குவது மிகப்பெரிய பொறுப்பு. படப்பிடிப்பு தளத்தில்கூட இந்த கூட்டணியை நினைத்தாலே எனக்கு பதற்றமாக இருக்கிறது என்று ரஜினி சாரிடம் சொன்னேன். ஆனால் அவருடன் பணியாற்றியது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு வயதே ஆகவில்லை என்று தோன்றுகிறது. எப்போதும் உற்சாகமாக இருப்பார். செட்டில் ஒரு குழந்தை மாதிரி துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கலகலப்பான இயல்பு முழு படப்பிடிப்பு தளத்தையும் உயிரோட்டமாக வைத்திருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அதோடு, “டிராகன் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழுவே தற்போது ‘தர்மன்’ படத்திலும் இணைந்துள்ளது. இந்த படம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக உருவாக்கப்படுகிறது. குறிப்பாக இது முழுக்க முழுக்க தலைவர் ரசிகர்களுக்கான படம். ரஜினியின் ஸ்டைல், ஸ்வேக், ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும். ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக அமையும்” என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
ரஜினிகாந்தின் 173வது படமாக உருவாகும் தர்மன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஆர். மகேந்திரன் இணை தயாரிப்பாளராக உள்ளார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.