தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக புதிதாக பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீது பி.என்.எஸ். 352 மற்றும் 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அப்போநு திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்ட்டவர் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்கும் வகையில் எஸ்.பி. அலுவலகத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக சிறையில் அடைப்பதற்கு முன்பான அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வழக்கு தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு தங்கள் வாதத்தை எடுத்து வைத்தது. இறுதியாக அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணனை ரூ.10 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் அடுத்த 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.