உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்தைப் பாத்ரூம் தரைக்கு அடியில் புதைத்து சிமெண்ட் பூசி மறைத்த மனைவியின் அசுரத்தனம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. ஆக்ராவின் சிகந்திரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 44 வயதான சுரேந்திரா என்பவர் கடந்த மே 18-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நாடகமாடி வந்துள்ளனர்.
கணவன் மாயமாகிவிட்டார் என்று கூறி கடந்த 45 நாட்களாக அந்தப் பெண் எந்தவொரு சலனமும் இல்லாமல் நாடகத்தை அரங்கேற்றி வந்த நிலையில், சுரேந்திராவின் தம்பிக்கு அண்ணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். உடனடியாகச் சுரேந்திராவின் வீட்டிற்கு விரைந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டின் பாத்ரூம் தரையைத் தோண்டி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தரைக்கு அடியில் சுரேந்திராவின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது போலீசாரையே உறைந்து போகச் செய்துள்ளது.
கணவனைக் கொன்று குழி தோண்டிப் புதைத்த பிறகு, துர்நாற்றம் வெளியில் வராமலும், யாருக்கும் சந்தேகம் வராமலும் இருக்கப் பாத்ரூம் தரையில் புதிதாகச் சிமெண்ட் பூசி அந்தப் பெண் மறைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. தற்போது கொடூர மனைவியைக் கைது செய்துள்ள போலீசார், இந்த கொடூரக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.