சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை அசைக்க முடியாத கட்சியாக அதிமுக இருந்தது. 20217ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக தலைமையை கைப்பற்ற நடைபெற்ற போட்டியில் பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி என மோதிக்கொண்ட நிலையில், கடைசியாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை கைப்பற்றினார். இதனையடுத்து அவரது தலைமையின் கீழ் கடந்த 9 வருடங்களாக அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்விக்கு மேல் தோல்வியே பரிசாக கிடைத்தது.
இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு பல்டி அடித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு மூத்த நிர்வாகிகள், மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என படையெடுத்து வருகிறார்கள். விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர். கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, எஸ்.பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல்,தாராபுரம் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த நிலையில், அடுத்து அடுத்து நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.
ஆனால் தவெகவிடம் கிளைக்கழகம் முதல் மாவட்ட, மாநில பணிகளை சரிவர செய்ய சரியான கட்சி நிர்வாகிகள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. எனவே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே கட்சியை பலப்படுத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே அதிமுகவை ஒட்டுமொத்தமாக தவெக பக்கம் இழுக்க அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக தவெக மூத்த தலைவரான ஆதவ் அர்ஜூனாவிற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தவெகிற்கு அழைத்து வருபவர்களுக்கு ஜாக்பாட் பரிசாக கட்சியில் பதவிகள் மட்டுமல்ல, வாரிய தலைவர் பதவியும் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிமுகவில் இருந்து 30 சதவிகித நிர்வாகிகள் தவெகவிற்கு சென்றுள்ளனர்.
எனவே வரும் நாட்களில் அதிமுகவில் இருந்து அதிகளவு நிர்வாகிகள் தவெகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப அந்த அந்த மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் இணைப்பு விழாவை நடத்தவும் தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான பொறுப்பை தவெகவில் இணைந்த அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தவெகவின் இந்த திட்டத்தை அதிமுக உடைக்குமா.? அல்லது எப்போதும் போல போனால் போகட்டும் என கண்டுகொள்ளாமல் இருக்குமா.? என கேள்வி எழுந்துள்ளது.