6 நாட்கள் பிரம்மாண்ட இறுதி ஊர்வலம்.. இன்று ஈரானில் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு தொடங்கியது.. மகன் மொஜ்தபா பங்கேற்க மாட்டார்!
Dinamaalai July 04, 2026 11:48 AM

அணுசக்தி விவகாரம் காரணமாக, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலின் முதல் நாளிலேயே கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் அடக்கத்திற்கான அதிகாரப்பூர்வ இறுதிச்சடங்கு நிகழ்வுகள் இன்று முதல் ஈரானில் முறைப்படி தொடங்கியது. நாடு தழுவிய அளவில் 6 நாட்களுக்குப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த இறுதி விடைபெறல் நிகழ்வில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தலைநகர் தெஹ்ரானில் குவியத் தொடங்கியுள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் சுவிட்சர்லாந்தில் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், கமேனியின் இறுதிச்சடங்குக்கான விரிவான ஏற்பாடுகளை ஈரான் அரசு தற்போது வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக, அயதுல்லா அலி கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி, பலத்த ராணுவப் பாதுகாப்புடன் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய மத வழிபாட்டு வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட அதே வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அவரது சவப்பெட்டி கொண்டு செல்லப்பட்டது. அங்குத் திரண்டிருந்த ஈரானியப் புரட்சிப் படை தளபதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், சவப்பெட்டி இமாம் கமேனி ஹுசைனியா வளாகத்திற்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது.

மறைந்த தலைவருக்குச் சிறப்புச் செய்யும் வகையில் ஈரான் மற்றும் அண்டை நாடான ஈராக்கின் புனித நகரங்களை இணைத்து 6 நாட்களுக்குப் பிரம்மாண்டமான ஊர்வலத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தெஹ்ரானில் உள்ள 'மொசல்லா பெரிய மசூதியில்' பொதுமக்கள் மற்றும் சர்வதேசத் தூதர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. ஜூலை 6 தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. ஜூலை 7 (புனித நகரம் கோம்) தெஹ்ரானில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின் ஆன்மீகத் தலைநகரமான 'கோம்' நகரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு ஷியா மதச்சடங்குகள் நடத்தப்படும்.

ஜூலை 8 (ஈராக் - கர்பலா பயணம்)  எல்லையைக் கடந்து அண்டை நாடான ஈராக்கில் உள்ள புகழ்பெற்ற 'கர்பலா' புனித நகரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும். ஜூலை 9 (இறுதி உடல் அடக்கம்) இறுதி நாளான ஜூலை 9 அன்று, ஈரானின் வடகிழக்கில் உள்ள புனித நகரமான 'மஷ்ஹத்'   நகரில் அயதுல்லா அலி கமேனியின் உடல் முழு அரசு மரியாதைகளுடன் முறைப்படி அடக்கம் செய்யப்படவுள்ளது.

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் புதிய ஆன்மீக உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி சமீபத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி மாத அமெரிக்கத் தாக்குதலின் போது கடுமையான காயமடைந்திருந்த மொஜ்தபா, பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை பொதுவெளியில் ஒருமுறை கூடத் தோன்றவில்லை.

இந்நிலையில், தற்போதைய பதற்றமான சூழலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' மற்றும் அமெரிக்கப் படைகளின் நேரடிப் படுகொலை அச்சுறுத்தல்கள் தீவிரமாக இருப்பதால், தனது தந்தை கமேனியின் 6 நாள் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  தகவலை, இந்தியாவில் உள்ள ஈரானிய உச்ச தலைவரின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியான அயத்துல்லா ஹக்கீம் இலாஹி  அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். புதிய தலைவரின் பாதுகாப்பைக் கருதி அவர் ரகசியப் பதுங்கு குழியிலிருந்தபடியே ஈரானை வழிநடத்துவார் எனத் தெரிகிறது. இறுதிச்சடங்கிற்கு வரும் லட்சக்கணக்கான மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளைத் தெஹ்ரான் நகராட்சி போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.