கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
அருண் சின்னதுரை July 04, 2026 12:44 PM

ஒரு வாய்ப்பு தவறினாலும், அடுத்த வாய்ப்பை உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கனவு காண வேண்டும்; அந்தக் கனவை நனவாக்க இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும். - என மாணவர்களுக்கு அறிவுரை.

கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பு
 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், கோடை விடுமுறைக் காலத்தில் புத்தகங்களை வாசித்து சிறப்பான பின்னூட்டங்களை வழங்கிய மாணவ, மாணவியரைப் பாராட்டும் வகையில் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி ஆசிரியை வினோதா வரவேற்புரை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை சார் நிலை கருவூல அலுவலர் கருணாநிதி கலந்து கொண்டு, புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
 
சார் நிலை கருவூல அலுவலர் பேசியதாவது:
 
“ஒரு புத்தகத்தை வாசிப்பது மட்டுமல்ல, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதைப் பதிவு செய்து சிந்திப்பதும் மிகவும் முக்கியமானது. புத்தக வாசிப்பு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட உதவுவதோடு, நினைவாற்றல், பேச்சுத்திறன், சிந்தனைத்திறன் மற்றும் பொதுஅறிவை மேம்படுத்துகிறது. நல்ல புத்தகங்கள் மனிதனின் குணநலன்களை வளர்க்கின்றன. உலகில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை வளர்த்ததாலேயே உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். எனவே, மாணவர்கள் புத்தக வாசிப்பை வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். வாசிப்பின் மூலம் கிடைக்கும் கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கமும் வளர வேண்டும். இதன் மூலம் தன்னம்பிக்கை, மொழித்திறன் மற்றும் வெளிப்படுத்தும் திறன் அதிகரிக்கும்.
 
வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன
 
புத்தகங்களுடன் செய்தித்தாள்களையும் தினமும் வாசிக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிப்பது மொழி அறிவையும், சமகால நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகள் குறித்த அறிவு மிகவும் அவசியம். ஒரு தேர்வில் வெற்றி பெற முடியாவிட்டாலும் மனம் தளரக் கூடாது. இன்னும் பல வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஒரு வாய்ப்பு தவறினாலும், அடுத்த வாய்ப்பை உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கனவு காண வேண்டும்; அந்தக் கனவை நனவாக்க இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
 
கற்றலும் வாசிப்பும் காரணமாக அமைந்துள்ளன.
 
நான் இன்று கருவூல அலுவலராகப் பணியாற்றும் நிலையில் இருப்பதற்கு தொடர்ந்து கற்றலும் வாசிப்பும் காரணமாக அமைந்துள்ளன. என் தந்தை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய ஓய்வூதிய ஆவணங்களில் அதிகாரியாக கையொப்பமிட்ட தருணம் என் வாழ்வின் மறக்க முடியாத பெருமையான தருணமாகும்” என்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். தொடர்ந்து, கோடை விடுமுறையில் புத்தகங்களை வாசித்து சிறந்த முறையில் கருத்துகளை பதிவு செய்து பின்னூட்டம் அளித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மேற்கொண்ட இந்த முயற்சியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டினர். நிறைவாக  ஆசிரியர் ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.