“முதல்வர் விஜயின் காலில் விழுந்தாலும் சரி, தவம் இருந்தாலும் சரி”… அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேர்க்க மாட்டோம்… சொன்னது யாருன்னு ஆதாரத்தை காட்டுங்க.. அமைச்சர் அதிரடி..!!
SeithiSolai Tamil July 04, 2026 02:48 PM

தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய புகாரில், தூத்துக்குடி போலீஸாரால் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று  அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அவரிடம் போலீஸார் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ‘தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைய சொல்லி போலீஸார் மிரட்டுகின்றனர்’ என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற கேவலமான ஒருவரை தவெக-வில் சேர்க்கவே மாட்டோம்; அவர் தவமிருந்தாலும், ஏன் முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் கூட அவரைப் போன்ற ரவுடிகளை எங்கள் கட்சியில் சேர்க்க மாட்டோம்” என்று அமைச்சர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், முதல்வர் விஜய்யைப் பேசியதற்கு வழக்கு போடாமல் இருக்க முடியாது என்றும் கூறினார். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், தவெக-வில் சேரச் சொல்லி மிரட்டியது யார் என்பதை ஆதாரத்துடன் கூற வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். மாற்று கட்சியிலிருந்து தவெக-வுக்கு வந்தவர்கள் மீது வழக்கு இருந்தாலும் விசாரணை தொடரும் என்றும், யார் ஊழல் செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கறாராகப் பேசியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.