Bangkok Bar Fire Accident: பேங்காக் பாரில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து தலைநகரில் உள்ள பாரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 27 பேர் உடல் கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல அடி உயரத்திற்கு உமிழப்பட்ட தீப்பிழம்புகளில் இருந்து உயிர் பிழைக்க மக்கள் தப்பியோடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மீட்பு குழுவினர் தெரிவித்துள்ள தகவல்களின்படி, பேங்காக்கின் வடக்குப் பகுதியில் உள்ள நா லட்ப்ராவ் மதுபான விடுதியில் நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் தீயுடன் போராடி நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீப்பற்றிய சில நொடிகளிலேயே கூரை வரையில் நெருப்பு மளமளவென வேகமாக பரவியுள்ளது. உயிரிழப்புக்கு புகை தான் முக்கிய காரணம் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பேசிய பேங்காக் ஆளுநர் சாட்சார்ட், “27 பேர் உயிரிழந்த நிலையில், 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என குறிப்பிட்டார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கருதப்படுகிறது. அவசர காலத்தில் வெளியேறும் வழிக்கு அருகே பலர் உயிரிழந்து கிடந்ததாகவும், கூட்ட நெரிசல் இதற்கு காரணமாக இருக்கலம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துளனர்.
தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மின்சாரம் தடைபடுவதற்குச் சற்று முன்பு, அந்த மதுபான விடுதியில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த ஒரு இசைக்கலைஞர், மேடைக்கு அருகில் இருந்த ஒரு சர்க்யூட் பிரேக்கரிலிருந்து புகை வருவதைக் கவனித்ததாக என்னிடம் கூறினார். சில கணங்கள் கழித்து, ஒரு வெடிச்சத்தம் கேட்டதுடன், அந்த இடம் முழுவதும் விரைவாக அடர்த்தியான புகையால் நிரம்பியுள்ளது. பப்பின் பின்புறம் உள்ள கழிவறைகளில் பல பாதிக்கப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டனர்” என்று அனுதின் குறிப்பிட்டார்.
Insane fire at a popular pub in Thailand’s capital, Bangkok, late Sunday night, killed at least 27 people and injured 63 others. The blaze broke out at around 11.57 pm local time at Rong Beer Na Lat Phrao, a live music pub in Bangkok’s Chatuchak district. pic.twitter.com/Squ4O6WgNy
— Vani Mehrotra (@vani_mehrotra) July 13, 2026
புகைமூண்ட பாருக்குள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தப்பித்து வெளியேற மக்கள் அலறியடித்து ஓடியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் மதுபான விடுதியைத் தீப்பிழம்புகள் சூழ்ந்திருப்பதும், அதன் நுழைவாயிலிலிருந்து அதிக அளவில் புகை வெளியேறுவதும் காணப்பட்டன. இரவு வானில் அடர்த்தியான கருப்புப் புகை உயர்ந்தபோது, மக்கள் தப்பித்து ஓட முயற்சிப்பதைக் காண முடிந்தது. ஒரு சுவற்றின் பக்கவாட்டில் இருந்து தீப்பிழம்பு சீறிப்பாய, அதிலிருந்து தப்பிக்க மக்கள் அலறியடித்து ஓடியதும் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.