பாக்யராஜ் மறைந்ததும் வெடித்த சீனியர் - ஜூனியர் மோதல்.. வார்த்தையை விட்ட பார்த்திபன்.. நடந்தது என்ன?
பேச்சி ஆவுடையப்பன் July 13, 2026 12:44 PM

எழுத்தாளர்கள் சங்க தேர்தல் மறைந்த இயக்குநர் பாக்யராஜூக்கு மன உளைச்சல் இருந்ததாக நடிகர் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கு, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. 

இயக்குநர், நடிகர் என பன்முக திறமையாளராக இருந்த கே.பாக்யராஜ் கடந்த ஜூன் 27ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுச் செய்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே பாக்யராஜின் உதவி இயக்குநராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பார்த்திபன் தொடர்ச்சியாக பாக்யராஜ் வாழ்க்கையில் நடந்ததாக சில விஷயங்களைப் பற்றி பேசி வருகிறார். 

அதில் முக்கியமானதாக எழுத்தாளர்கள் சங்க தேர்தல் அவருக்கு சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார். இதற்கு எழுத்தாளரும், பாக்யராஜின் சீடருமான பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதாவது, “நம் குரு பாக்யராஜின் மறைவு தரும் வலியும், வேதனையும், கண்ணீரும், கவலையும் உங்கள் ஒருவருக்கு மட்டுமில்லை, லட்சக்கணக்கான நண்பர்களுக்கும் இருக்கிறது. நீங்கள் அதைத் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் பதிவு செய்கிறீர்கள். பாக்யராஜின் 50 வருட திரையுலகப் பயணத்தில் உங்களுக்கு முன்பும், உங்களுக்குப் பின்புமாக நூற்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் அவரோடு பணியாற்றியுள்ளார்கள். அவர்களில் நீங்கள் சீனியர். நான் ஜூனியர். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம் உள்ளது. 

சமீபத்தில் உங்கள் பதிவொன்றில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலையும், கே.பாக்யராஜையும் சம்பந்தப்படுத்தி பேசியிருப்பது எனக்கு மன நெருடலை ஏற்படுத்தியுள்ளது. 

பார்த்திபன் சொன்னது என்ன?

அதில் எழுத்தாளர்கள் சங்க தேர்தல் அவருக்கு சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிந்தேன். தேர்தலை சந்திக்கும் போது அட்ரஸை தேடி வரும் அழுத்தத்தை  சமாளிக்க முடியாமல் சற்றே சிரமப் பட்டதாக கேள்விப்பட்டேன்.  அவர் மறைவிற்கு பின் என்னிடம் சிலர் அவருக்கு பதிலாக அத்தலைவர் பதவிக்கோ செயலாளர் பதவிக்கோ போட்டியிட்டால் அமோக வெற்றி பெறலாம் காரணம் தற்போது தங்கள் மீது அபார அபிப்பிராயம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்கள். நான் மென்மையாக அதை மறுத்தேன். என் ஒவ்வொரு சொட்டு உண்மையான கண்ணீருக்கும் உள்நோக்கமான களங்கம் கற்பிக்கப்படும்.என் உணர்வுகள் முழுக்க முழுக்க உன்னதமானது அதை அனுதாபமாக்கி விற்று வெற்று வெற்றி பெற எனக்கு விருப்பமில்லை என்பதை அழுத்தமாக சொல்லி விட்டேன்.வெற்றி பெறும் அணிக்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள் என பார்த்திபன் தெரிவித்திருந்தார். 

ஜூனியர் பட்டுக்கோட்டை பிரபாகர் விமர்சனம்

தேர்தல் தொடர்பாக அவருக்கு மன உளைச்சல் இருந்ததாக நீங்கள் கேள்விதான் பட்டீர்கள். நான் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேல் அவரோடு சங்கத்தில் இணைந்து பணியாற்றியவன். நேரடியாக அறிந்தவன். அந்த மன உளைச்சலை பகிரங்கமாக பொதுக் குழுவில் பேசியதை உறுப்பினர் என்கிற முறையில் வந்திருந்தால் நேரடியாகவே நீங்களும் கேட்டு அறிந்திருக்கலாம். அவர் மறைந்தது 27 ஆம் தேதி காலை. முதல் நாள் 26 ஆம் தேதி இரவு 10.30 க்கு என்னை போனில் அழைத்து பல வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டார். தவிர அமைத்திருந்த தேர்தல் அணியில் நானும் இருக்க வேண்டும் என்றார். மறுநாள் அது தொடர்பாக சந்திக்க நேரமும் குறிப்பிட்டார். மறு நாள் சந்திக்காமலேயே மறைந்து விட்டார். 

அவர் தேர்தலைச் சந்திக்க விரும்பினார். அந்த அணியையும் தன் கைப்பட எழுதி வைத்திருந்தார். சங்கத்தில் பொறுப்பேற்று பணியாற்றுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்று அவர் நினைத்ததால் அந்தப் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. அவர் கடைசியாக விரும்பியது சங்கத்தின் தேர்தலைச் சந்தித்து உறுப்பினர்களுக்கு தொடர்ந்து நன்மைகள் செய்ய நினைத்தார். அந்தக் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு ஏற்பட்டதால் அவர் விரும்பி தேர்ந்தெடுத்து வைத்திருந்த அணியினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவர்மீது அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும் சில நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களை ஆலோசித்து தீவிரமாக இறங்கினேன்.

 அவருக்கு மாற்று என்று யாருமே இருக்க முடியாதென்றாலும், அவரின் கனவுகளை நிறைவேற்றும் வேட்கையும், சங்க உறுப்பினர்களின் மீது அக்கறையும் கொண்ட ஒரு தலைவனை எங்கள் அணிக்குத் தேடினோம். அந்த முயற்சிகளில் ஒன்றாக இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் உங்களைத் தேடி வந்தார். நானும், இயக்குநர் செல்வபாரதியும்  இயக்குநர் சேரனைச் சந்தித்தோம். 

தங்களைச் சந்தித்தபோது நீங்கள் பேசியதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அப்போது நீங்கள் வைத்த கோரிக்கை அலது நிபந்தனையைத் தவிர்த்திருக்கிறீர்கள். அதை நாகரிகம் கருதி நானும் தவிர்க்கிறேன். சேரனுடன் மனம் விட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிய பிறகு அவரும் நம் குருவின் அபிமானி என்பதாலும், அவரின் கனவுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி அவருக்கும் ஏற்பட்டதாலும் எங்கள் அணியில் தலைமைப் பொறுப்பேற்கச் சம்மதித்தார். அதன் பிறகு உருவானதே நம்ம கே.பாக்யராஜ் அணி.

உங்கள் பதிவில் என்னை மிகவும் காயப்படுத்தியது இந்த   வரிகள், “எல்லோரின் உணர்வுகளும் உன்னதமானவைதான். அந்த அனுதாபத்தை விற்பனை செய்வதற்காக நாங்கள் களமிறங்கவில்லை. அவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொண்டு இறங்கியுள்ளோம். இதில் கிடைக்கும் வெற்றி வெற்று வெற்றி அல்ல  ஒவ்வொரு பதிவிலும் வார்த்தை விளையாட்டை மட்டுமே வைத்து எழுதி நல்ல நோக்கங்களை அலட்சியப்படுத்தாதீர்கள் சீனியர்” என காட்டமாக தெரிவித்துள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.