தமிழகத்தில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்து வருவதாகும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், மகளிர் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய திருமணமான பெண்ணை பின் தொடர்ந்தும்,
பாலியல் ரீதியாக சைகைகள் காட்டியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவரை, பொதுமக்களே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பது மட்டுமன்றி வன்மையான கண்டனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக, இந்த தொடர் பாலியல் தொல்லை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் கூட, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுவது, காவல்துறையை நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கம் முதல்வர் விஜய் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்குகிறது.
“தவெகக்காரன்” என்ற அடைமொழி குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? உள்ளூர் தவெக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்து கொண்டிருக்கிறது? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கான பதிலை முதல்வர் தேடினாலே, அவரின் ஆட்சியின் லட்சணம் தெரிந்து விடும். எனவே, இனியாவது ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி நிர்வாகிகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.