FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்
Dhinasari Tamil July 14, 2026 02:48 PM

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026 : காலிறுதி ஆட்டங்கள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதி ஆட்டங்கள் 9, 10, 11 ஜூலை 2026இல் நடைபெற்றது. இன்று (14.07.2026) முதல் அரையிறுதி ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. கால்பந்தாட்டத் தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் உள்ள ஃபிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜெண்டைனா ஆகிய நாடுகள் அரையிறுதியில் மோதுகின்றன.

முதல் காலிறுதி ஆட்டம் ஜூலை 9இல், ஃபாக்ஸ்பர்ரோவில் நடந்தது. ஃபிரான்சு, மொரோக்கோ அணிகள் மோதின. ஃபிரான்சு அணியின் எம்பாபே 60ஆவது நிமிடத்திலும் டெம்பெல்லே 66ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மொரோக்கோ அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஃபிரான்சு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இரண்டாவது ஆட்டம் ஜூலை 10இல் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகளுக்கிடையே இங்க்லேவுடில் நடந்தது. ஸ்பெயின் அணியின் ஃபேபியான் 30ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். பெல்ஜியம் அணியின் டி கேடேலாரே 41ஆவது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். ஆட்டநேர முடிவில் 88ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மென்னோ இரண்டாவது கோலை அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

மூன்றாவது ஆட்டம் நார்வே, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மியாமியில் நடைபெற்றது. நார்வே அணி 36ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் பெல்லிங்ஹாம் 47ஆவது நிமிடத்திலும் 93ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்டத்தின் போக்கில் சில நிமிடங்கள் ஆட்டம் நின்றுபோகலாம். அதனை ஈடுசெய்வதற்காக சில நிமிடங்கள் ஆட்டம் நீட்டிக்கப்படும் அவ்வாறு நீடிக்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது கோல் அடித்தது. ஒருவேளை இந்த நேரத்திலும் இரு அணிகளும் சமமான நிலையில் இருந்தால் 30 நிமிடம் ஆட்டம் நீடிக்கப்படும். அப்போதும் கோல்கள் சம்நிலையில் இருந்தால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்படும்.

நான்காவது ஆட்டம் அர்ஜெண்டைனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையே, கன்சாஸ் நகரில் நடந்தது. அர்ஜெண்டைனாவில் மேக் அலிஸ்டார் 10ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். சுவிட்சர்லாந்தின் டோயே 67ஆவது நிமிடத்தில் சமன் செய்யும் கோலை அடித்தார். அதன் பின்னர் ஆட்டநேர முடிவு வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டம் 30 நிமிடம் நீட்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அர்ஜெண்டைனாவின் அல்வரஸ் 112ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் லா மார்ட்டினஸ் 121ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். இதனால் அர்ஜெண்டைனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள் News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.