MBBS BDS Medical Counseling: MBBS மற்றும் BDS போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, கடந்த 23ம் தேதியுடன் அவகாசம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
MBBS மற்றும் BDS போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று சிறப்பு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, “விருப்பமுள்ள மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணி மணி வரை விண்ணப்பிக்க முடியும். இது வரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த அவகாச நீட்டிப்பே மாணவர்களுக்கு வழங்கப்படும் இறுதி வாய்ப்பாகும் (One-time measure). இதன் பிறகு எக்காரணம் கொண்டும் மீண்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய அவகாசத்தின் போது விண்ணப்பிக்க தவறிய பல மாணவர்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 23ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 70 ஆயிரத்து 488 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி. பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பிற்கு 13 ஆயிரத்து 999 இடங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 40,761 பேர், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான சேர்க்கைக்கு, 29,727 பேர் என, மொத்தம் 70,488 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைத்தேர்வான நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பே விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கப்பட்டு கடந்த 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனிடையே, தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் கூட இதுவரை நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான பட்டியலையும், மத்திய அரசு வழங்கவில்லை. டெல்லியில் நடைபெற்று வந்த மாணவர் போராட்டம் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இவற்றால், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது தாமதமாகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், விருப்பமுள்ள மாணவர்கள் MBBS மற்றும் BDS போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, மருத்துவ கல்வி இயக்குனரகம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.