“சிக்கன் பிரியாணிக்காக கைதா?” 14 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்ட கதை…. வெளுத்து வாங்கிய நீதிபதி….!!
SeithiSolai Tamil July 26, 2026 07:48 PM

​”சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக ஒருவரைக் கைது செய்து ஜாமீன் மறுப்பது போன்ற செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். சாதாரண விஷயங்களைக்கூடக் குற்றமாக மாற்றி, உரிமைகளைப் பறிக்கும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரியது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​”அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதும், அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமையும்தான் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடிப்படை” என்று குறிப்பிட்ட நீதிபதி உஜ்ஜல் புயான், சிறு தவறுகளுக்காகக் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்தார். கடந்த மார்ச் மாதம் கங்கை ஆற்றில் படகில் சென்றபோது இப்தார் நோன்பு துறந்து பிரியாணி சாப்பிட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அவர் உதாரணமாக மேற்கோள் காட்டினார்.

​அன்று சாப்பிட்ட பிரியாணியின் எச்சங்களை ஆற்றில் வீசியதால், அது மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி அந்த 14 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, சுமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த நீதிபதி, இதுபோன்ற எளிய விஷயங்களைக்கூடப் பூதாகரமாக்கிக் கைது நடவடிக்கை எடுப்பது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என ஆதங்கப்பட்டார்.

​சட்டத்தையும் அதிகாரத்தையும் இதுபோன்ற சாதாரண விஷயங்களில் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதே நீதித்துறையின் தலையாய கடமை என்றும் அவர் தன் பேச்சில் மிக அழுத்தமாகப் பதிவு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த அதிரடி பேச்சு தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.