யூடியூபர் இர்ஃபான் மீது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோதும், திமுக ஆட்சிக் காலத்தில் அவருக்கு எதிராக பெரிய அளவிலான சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டிப்பைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மீண்டும் ஆக்ஷனில் இறங்கியுள்ளது.
யூடியூபர் இர்ஃபான் மீது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் பரிசோதித்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரம் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு, தனது மனைவியின் கர்ப்ப காலத்தில் துபாயில் பாலின பரிசோதனை மேற்கொண்டதாகவும், அது ஆண் குழந்தை என்பதை வீடியோவாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டதாகவும் இர்ஃபான் பகிர்ந்திருந்தார். இந்தியாவில் Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT) Act சட்டத்தின் கீழ் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவதும், அதை வெளிப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இர்ஃபான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியதுடன், சம்பந்தப்பட்ட வீடியோவையும் நீக்கியதாக கூறப்பட்டது. அதன் பின்னர் அந்த விவகாரத்தில் பெரிய அளவிலான சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்த நிலையில், இர்ஃபான் விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஜெகன்நாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது
வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை ஏற்கனவே இர்ஃபானுக்கு நோட்டீஸ் வழங்கி, அவரது விளக்கத்தை பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், அதில் திருப்தி அடையாத உயர்நீதிமன்றம், "நோட்டீஸ் அனுப்பியதோடு நடவடிக்கை முடிந்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியது
மேலும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு செயலை வெளிநாட்டில் மேற்கொண்டு, அதன் வீடியோவை இந்தியாவில் வெளியிட்டால், அதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆக்ஷனில் இறங்கியுள்ளனர். இர்ஃபானை மீண்டும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் பெற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
விசாரணையில்,
பாலின பரிசோதனை எந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டது? எந்த மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது? அந்த பரிசோதனை தொடர்பான ஆவணங்கள் என்ன? வீடியோவை வெளியிட காரணம் என்ன? இந்திய சட்டங்களை அறிந்திருந்தும் ஏன் அந்த வீடியோ வெளியிடப்பட்டது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், PCPNDT சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா, அல்லது வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமா என்பது குறித்தும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலின வெளிப்படுத்தல் விவகாரம் மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் இர்ஃபான் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். உணவகங்களில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்துதல், சுகாதார விதிமுறைகள் தொடர்பான புகார்கள், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்தன. ஒவ்வொரு முறையும் சர்ச்சைகள் வெடித்தாலும், அவை பெரிய அளவிலான சட்ட நடவடிக்கைகளாக மாறவில்லை என்ற விமர்சனமும் இருந்து வந்தது.