ஜூலை 27, 2026: ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்குள் பயணி ஒருவர் ஊதுபத்தி மற்றும் எண்ணெய் விளக்கை ஏற்றி பூஜை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் வீடியோவில், மேல் படுக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பயணி, பனியன் மற்றும் வேட்டி அணிந்தபடி கைகளை கூப்பி பிரார்த்தனை செய்வது தெரிகிறது. அவருக்கு முன்பாக ஊதுபத்திகள் மற்றும் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தன.
ஏசி ரயில் பெட்டியில் விளக்கு ஏற்றி பூஜை செய்த நபர்:🚆A video circulating on social media shows a passenger performing prayers on the upper berth of an AC train coach while lighting incense sticks and an oil lamp.
A fellow passenger reportedly intervened, explaining that such acts can be dangerous. Smoke may trigger the train’s… pic.twitter.com/79SrmBnAdW
— Jharkhand Rail Users (@JharkhandRail) July 26, 2026
இதைக் கவனித்த மற்றொரு பயணி, அவரை பலமுறை “பண்டிட்ஜி” என அழைத்து, இந்தச் செயல் குறித்து எச்சரித்தார். ஆனால், பூஜையில் ஈடுபட்டிருந்த அந்தப் பயணி, அழைத்தவரைத் திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீடியோ பதிவு செய்த பயணி, மற்ற பயணிகளிடம் அந்த நபர் தங்களுடன் பயணம் செய்கிறாரா எனக் கேட்டார். ஆனால், அவர் தங்களுடன் வரவில்லை என மற்ற பயணிகள் தெரிவித்தனர்.
பின்னர், அந்தப் பயணி மீண்டும் பூஜை செய்து கொண்டிருந்த நபரை எச்சரித்தார். ஊதுபத்தியில் இருந்து வரும் புகை ரயிலின் தீ எச்சரிக்கை அமைப்பைத் தூண்டக்கூடும் என்றும், திறந்த நிலையில் எரியும் எண்ணெய் விளக்கால் மூடப்பட்ட ஏசி பெட்டிக்குள் எதிர்பாராத தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது மத நம்பிக்கைகளைப் பின்பற்ற உரிமை கொண்டிருந்தாலும், நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் பொதுப் போக்குவரத்தில் திறந்த நெருப்பைப் பயன்படுத்துவது ஆபத்தானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே அதிகாரிகள்:மேலும், ரயில்வே அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படும் அந்தப் பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளப் பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிலர், இதுபோன்ற செயல்கள் ரயிலில் பயணம் செய்யும் மற்ற பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும், ரயிலில் புகைபிடிப்பதும், திறந்த தீயைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானவை என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.