கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு மற்ற அண்டை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு சுமார் 800 கிலோமீட்டர் பாய்ந்து தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆறு சுமார் 320 கிலோ மீட்டர் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டில் 416 கிலோ மீட்டர் தூரமும் பாய்கிறது. இப்படியான நிலையில் கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் காவிரி மற்றும் அர்க்காவதி ஆறுகள் இணையும் இடத்தில் மேகதாது அணை கட்ட அம்மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் நீர்மின்சாரம் தயாரிப்பதும், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் நோக்கம் என சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த திட்டத்திற்கு இன்னும் இறுதி ஒப்புதல் அழிக்கப்படவில்லை.
மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் ஆட்சிகள் மாறினாலும் தொடர் சட்டப்போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதுதொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமாரை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவையில் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது, “மேகதாது திட்டத்தைத் தொடர்வதற்கு முன்பு கர்நாடகா தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்றதா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுத்தார். அதில், திட்டத்தை உருவாக்கும்போதோ அல்லது செயல்படுத்தும்போதோ கர்நாடகா அண்டை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வலியுறுத்தவில்லை என சொல்லப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டுவதால் மாநிலத்திற்குள் வரும் நீரின் அளவு குறையும் என்று தமிழகம் கூறுகிறது. அதேசமயம் இந்தத் திட்டம் நீரைத் திசைதிருப்புவதற்காக அல்ல, மாறாக சேமிப்பதற்காகவே அமைக்கப்படுகிறது என்றும், கர்நாடகா தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இப்படியான நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பதில் கர்நாடகாவுக்கு சாதகமாக மாறியுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் மாநில தலைவரும், மக்களவை எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரியின் மேகதாது அணை விவகாரம் குறித்த பதில் மிகவும் ஆபத்தானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாட்டிற்கும் நமது விவசாயிகளுக்கும் எதிராகத் தான் மோடிஅரசு எப்போதும் செயல்படுகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம்.
அமைச்சரின் இந்தப் பதில் மூலம் பாஜகவின் தமிழ்நாட்டு எதிரான மக்கள் விரோதப்போக்கு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளையும், நமது விவசாயிகளின் நலனையும் காக்க இந்த முடிவை எதிர்த்து பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாகக் குரல் எழுப்பும்” என தெரிவித்துள்ளார்.